வங்காளத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வர முடியும் என்றால், அது மம்தா பானர்ஜியால் மட்டுமே முடியும் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தனது 64-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்து மழையில் நேற்று முழுவதும் நனைந்தார் மம்தா பானர்ஜி. இதில் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறிய வாழ்த்து முத்தாய்ப்பாக அமைந்தது.  அவரது வாழ்த்து செய்தி இதுதான்:

“வங்காளத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பு மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பட்டியலில் அவர் மட்டுமே முதலிடத்தில் இருப்பார். பிரதமர் பதவிக்கு மம்தா தகுதியானவர். மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது.

அப்படி அவர் பிரதமரானால், மேற்கு வங்காளத்தின் பெரிய மாற்றம் அடையும். ஜோதிபாசுக்கு அந்தப் பெருமை கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், இடதுசாரிகள் அதைக் கெடுத்துவிட்டார்கள். தற்போது வங்காளி பிரதமராகும் நேரம் வந்துவிட்டது” என்று அதிரடியாக வாழ்த்து கூறியிருக்கிறார் திலீப்.

அண்மையில் மேற்கு வங்காளத்தில் அமித் ஷா பங்கேற்க இருந்த ரத யாத்திரையை நடத்த மம்தா பானர்ஜி அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்றபோதும் தடையை நீக்க மறுத்து, அதில் உறுதியாக இருந்தார் மம்தா. இதனால், பாஜக தலைமை மம்தா மீது கடும் கோபத்தில் இருந்துவருகிறது. மேற்கு வங்காளத்தில் இந்த முறை 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இலக்கு நிர்ணயித்திருக்கிறார். இந்நிலையில் மம்தா பிரதமராக வருவார் என்று மாநில பாஜக தலைவர் விருப்பம் தெரிவித்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.