மாலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 9 ஆண்டுகளுக்குப்பின், 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த பிரக்யா சிங் தாக்கூர், மத்தியப் பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு எம்.பி.யாகினார்.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழு கடந்த மாதம் 21-ம் தேதி அமைக்கப்பட்டது. 21 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், திமுக எம்.பி. ஆ.ராசா, என்சிபி தலைவர் சரத் பவார், பாஜக சார்பில் பல்வேறு எம்.பி.க்களும், போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்களவைத் தேர்தலின் போது சாத்வி பிரக்யா பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கலில் சிக்கினார். குறிப்பாக மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேசபக்தர் என்று தெரிவித்தார். 

பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு பாஜக சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரக்யா தாக்கூர் பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது. 

காங்கிரஸ்  கட்சி ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், “ தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்ட, கோட்ஸைவைப் புகழும் பிரக்யா தாக்கூர், பாஜகவின் அரசில் பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நடவடிக்கை நம்முடைய பாதுகாப்புத் துறையை அவமானப்படுத்தும் செயல், நம்முடைய புகழ்பெற்ற நாடாளுமன்றத்தையும், உறுப்பினர்களையும், ஒவ்வொரு இந்தியரருக்கும் அவமானமாகும்”  எனத் தெரிவித்துள்ளது

காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரணவ் ஜா கூறுகையில் “ தேசத்தின் பாதுகாப்புத்துறையின் நாடாளுமன்றக் குழுவி்ல் உறுப்பினராக பிரக்யா நியமனம் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவரின் நியமனத்தை பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.