தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட இருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

உள்துறை செயலாளர் பதவி என்பது தமிழகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்து அதிகாரமிக்க ஐஏஎஸ் பதவியாகும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி முதல் மாவட்ட எஸ்பிக்கள் நியமனம், பணியிடமாற்றம் வரை அனைத்தும் உள்துறை செயலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சொல்லப்போனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பு உள்துறை செயலாளர் தான்.

தமிழக காவல்துறையை நிர்வகிக்கும் மிக முக்கிய பொறுப்பு என்பதால் ஆட்சியாளர்கள் எப்போதும் தங்களுக்கு நம்பிக்கையான ஒருவரைத்தான் உள்துறை செயலாளராக்குவது வழக்கம். அந்த வகையில் எடப்பாடியாருக்கு இதுநாள் வரை நம்பிக்கைக்கு உரியவராக இருந்த நிரஞ்சன் மார்டி ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது புதிய உள்துறை செயலாளர் யார் என்பது தான் ஹாட் டாபிக்.

இரண்டு பேரின் பெயர்கள் இந்த பதவிக்கு அடிபடுகிறது. ஒருவர் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர், மற்றொருவர் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளாராக இருக்கும் ஹன்ஸ் ராஜ் வர்மா. இவர்கள் இருவரில் பிரபாகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்லப்பிள்ளை.

ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நெருக்கமாக காரணமான நெடுஞ்சாலைத்துறையை இத்தனை நாட்கள் கவனித்து வந்தவர் பிரபாகரன் தான். பொதுப்பணித்ததுறையை விட தனது நெடுஞ்சாலைகள் துறையை மிகவும் முக்கியமாக கருதியவர் எடப்பாடி. அதனால் தான் அந்த துறைக்கு தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய மற்றும் பிடித்தமான பிரபாகரனை வைத்து கவனித்து வந்தார்.

எனவே தற்போதைய சூழலில் உள்துறை எனும் மிக முக்கியதுறைக்கு பிரபாகரன் தான் நியமிக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஊரக வளர்ச்சித்துறையில் செயலாளராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மாவும் முதலமைச்சருக்கு மிகவும் வேண்டியவர் என்கிறார்கள். தற்போது அமைச்சர் எஸ்.பிவேலுமணியுடன் இணைந்து இவர் பணியாற்றி வருகிறார்.