அகில இந்தியத் தலைவர் தேர்தல் முடிந்ததும் தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்..

காங்கிரசு கட்சி சார்பில் பிரியங்கா காந்தியின் பிறந்த நாள் மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சென்னை ஷெனாய் நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத்  தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். அதன்பின்பு, அவர் செய்தியாளர்களிடம், "இது மகிழ்ச்சித் திருநாள். மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் ஆட்சிகள் அகற்றப்படும் நாளில்தான் மக்கள் உண்மையான மகிழ்ச்சி அடைவர்.

தமிழகத்திலும் பொங்கலுக்குப் பிறகு நல்ல தகவல் வரும். தமிழக காங்கிரசு தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். மாற்றம் முடிவாகி விட்டது. எனவே, சில நாள்களாவது சந்தோஷமாக பேசிவிட்டு போகட்டும்.

காங்கிரசு தோழர்களுக்கு நான் தருகின்ற செய்தி. தைரியமாக இருங்கள். உழைப்புக்கு மரியாதை இருக்கும். எங்களுடைய கட்சிக்குள் புகுந்து விட்டவர்கள் வெளியே தூக்கி எறியப்படும் காலம் வந்துவிட்டது. இருக்கும் கிரீடத்தை எடுப்பது உறுதியாகிவிட்டது. யாருக்கு சூட்டுவது என்பதை தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார்.

அகில இந்தியத் தலைவர் தேர்தல் முடிந்ததும் புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மாற்றப்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று அவ்வளவுதான்.

தலைவர் மாற்றத்துக்கான காரணம் எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்த வரை கட்சி  வேலைகள் சரியாக நடைபெறாத நிலையில், புதிய தலைமை என்பது நல்லதுதான் என்று கருதுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.