அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ் தற்போது பா.ஜ.கவின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக துணை முதலமைச்சரான ஓ.பி.எஸ்சின் உதவியாளராக இருந்தவர் ரமேஷ். ஓ.பி.எஸ் இருக்கும் இடங்களில் அவருக்கு நிழலாக இருந்தவர் இவர். கடந்த 21 ஆண்டுகளாக ரமேஷ் ஓ.பி.எஸ் உடன் இருக்கிறார். இவர் ஓ.பி.எஸ்சுக்கு மாப்பிள்ளை முறையாகும். ஓ.பி.எஸ் அரசியலில் வளரத் தொடங்கிய காலம் முதல் உச்சத்திற்கு சென்ற காலம் வரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் ரமேஷ் தான். 

 ஓ.பி.எஸ் தனது மகன்களை விட ரமேஷை தான் அதிகம் நம்புவார் என்கிற ஒரு பேச்சும் இருந்தது. இதனால் தான் ரமேஷ் பெயரில் ஏராளமான சொத்துகள் வாங்கப்பட்டதுடன் ஓ.பி.எஸ் குடும்பத்தின் பல்வேறு தொழில்களையும் ரமேஷ் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்வகித்து வந்தார். ஆனால் திடீரென கடந்த மாதம் ரமேஷை ஓ.பி.எஸ் வீட்டில் பார்க்க முடியவில்லை. மேலும் ஓ.பி.எஸ் நிகழ்ச்சிகளிலம் ரமேஷ் தென்படவில்லை. 

இந்த நிலையில் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக ரமேஷ் என்கிற பெயரில் ட்விட்டரில் பல்வேறு தகவல்கள் உலவின. ஆனால் அந்த தகவல்களை தான் வெளியிடவில்லை என்று ரமேஷ் மறுத்தார். அதன் பிறகு மாயமான அவர் தற்போது பெரியகுளத்தில் உள்ளார். அங்கும் கூட வீட்டை விட்ட வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடக்கிறாராம் ரமேஷ். ஓ.பி.எஸ்சின் நிழலாக இருந்த ரமேஷ் குறித்து மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கை தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

ஓ.பி.எஸ் கொடுத்த சுதந்திரத்தை ரமேஷ் தவறாக பயன்படுத்தியதை மத்திய உள்துறை ஆதாரத்துடன் போட்டுக் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்தே ரமேஷை ஓ.பி.எஸ் விரட்டி அடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜி என்பவர் ஓ.பி.எஸ்சின் உதவியாளர் ஆகியுள்ளார். இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. பா.ஜ.க உத்தரவில் மத்திய உளவுத்துறை ஏற்பாட்டில் பாலாஜி ஓ.பி.எஸ் உதவியாளர் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இவர் மூலமாகத்தான் தற்போது டெல்லி ஓ.பி.எஸ்சை இயக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் கலகத்தை ஆரம்பித்த போதும், இந்த ரமேஷ் ஓ.பி.எஸ் வீட்டில் இருந்ததாகவும், எம்.எல்.ஏக்களை வளைக்கும் நடவடிக்கையில் உதவியதாகவும் சொல்லப்படுகிறது.