தி.மு.க., ஆட்சியின்போது தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்பட்டதாக குறிப்பிட்டு டுவிட்டரில் #தமிழர்_துரோகி_திமுக என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

 

தமிழகத்தில் கடந்த பாதி நூற்றாண்டுகளாக திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளே ஆட்சியில் அமர்ந்துள்ளன. மற்ற கட்சிகள் எவ்வளவு தான் முற்பட்டாலும், இந்த இருபெரும் கட்சியை தாண்டி ஆட்சி அரியணையில் அமரமுடிவதில்லை. அந்த அளவிற்கு அரசியலில் இருபெரும் துருவங்களாக உள்ள இந்த கட்சிகள், அவர்களுடைய ஆட்சியில் நடந்த சாதனைகளை விளக்கியும், சம்பவங்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை குறிப்பிட்டு விமர்சனத்தை முன்வைத்தும் அரசியல் செய்து வருகின்றனர். மக்கள் நலனுக்காகவே திட்டங்களும், நடவடிக்கைகளும் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்திற்காக இருந்தால், எதிர் தரப்பினர் விமர்சிப்பது அரசியலில் இயல்பானதே.

 

அப்படி இருக்கையில், திமுக ஆட்சி காலத்தில் நடந்த சில விஷயங்கள் இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மின்வெட்டு, காவிரி நீர் பங்கீடு, ஈழ தமிழர் படுகொலை, கச்சத்தீவு மீனவர் பிரச்னை, மீத்தேன் திட்டம் ஆகியவற்றை அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவை அனைத்தும் தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பலதரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ஆனால், திமுக., தரப்பும் இதற்கு விளக்கங்கள் கொடுத்தாலும், அதிமுக.,வினர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நெட்டிசன்களும் இவற்றையெல்லாம் குறிப்பிட்டு டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

 

தமிழர்களுக்கு திமுக., விரோதியாக இருப்பதாக குறிப்பிட்ட ஒருவர், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேசியிருந்த செய்தியுடன் கூடிய நாளேடை பகிர்ந்துள்ளார். இன்னும் சிலர், திமுக ஆட்சி காலத்தில் 15 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு தொடர்ந்ததை குறிப்பிட்டிருந்தார்.

 

மற்றொருவர், 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தொழில் வளத்தை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிய திமுக., தற்போது தமிழகத்தை மீட்போம் என கூறலாமா,' எனவும் பதிவிட்டுள்ளார். இப்படியாக, திமுக., ஆட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வெளிப்படுத்தி #தமிழர்_துரோகி_திமுக என்னும் ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.