Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது இபிஎஸ்தான். எடப்பாடி பழனிச்சாமியை பொளந்து கட்டிய மா.சு..

2011ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகமானபோது திமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது. அப்போது தமிழகத்திற்கு விலக்கு பெறப்பட்டது. ஆக மொத்தத்தில் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை.

NEET Exam  was welcomed on the red carpet by EPS only. Health Minister Ma.su Criticized Edapadi Palanisamy.
Author
Chennai, First Published Jul 19, 2021, 1:14 PM IST

திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை என்றும் ஆனால் அதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எடப்பாடி பழனிச்சாமி தானென்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளார்.

குறிப்பாக நீட் தேர்வு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டதாகும், இந்நிலையில் இதற்கு காரணம் யார் என்பது குறித்து இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் தனது தேர்தல்  வாக்குறுதிபடி ஏன் திமுக நீட் தேர்விலிருந்து இன்னும் விலக்குபெறவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி திமுகவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை, ஆனால் அதை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகத்திற்கு கொண்டு வந்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை  கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார் அங்கு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்தவர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; 

கொரோனா இரண்டாம் அலையின்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் 150 படுக்கைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இங்கே ஆக்சிஜன் டேங்கும்  நிறுவப்பட்டுள்ளது. தற்போது மத்திய பொதுப்பணி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தமிழகத்தில் 70 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவும் பணி தொடங்கி அதில் 20 இடங்களில் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறிய மருத்துவமனைகளாக இருந்தாலும் ஆக்சிஜன் சிகிச்சை வழங்குவதற்கு போதுமான வசதிகள் ஏற்படுத்த பட்டுள்ளது. மூன்றாவது அறை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேகே நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை, பெரியார் நகர் மருத்துவமனைகளில் 600 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 

இன்னும் இரண்டாம் அலையில் இருந்தே நாம் மீளவில்லை அதற்குள், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை ஐசிஎம்ஆரிடம் இருந்து வந்துகொண்டே இருக்கிறது என்றார். அப்போது நீட் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், மொத்தத்தில் நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும், 2011ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகமானபோது திமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது. அப்போது தமிழகத்திற்கு விலக்கு பெறப்பட்டது. ஆக மொத்தத்தில் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது எடப்பாடி பழனிச்சாமி தான். 13 மாணவர்கள் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமிதான். 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு காரணம் திமுகதான். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்தியதன் எதிரொலியாகதான் அந்த இடஒதுக்கீடும் கிடைத்தது என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios