வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு சென்னை லயோலா கல்லூரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றார். அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது என்ற அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் கமல் பதிலளித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கமலின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் மாதிரி. திடீர் என வருவார் திடீர் என காணாமல் போய்விடுவார் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என நகைச்சுவையாக தெரிவித்தார். பிக்பாஸ் ஒரு கலாசார சீரழிவு. அந்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிக்பாஸ் இல்லம் ஒரு அலிபாபா குகைபோல உள்ளது.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மகாபலிபுரம் வருவதையொட்டி பேனர் வைக்க நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு இன்றி அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி பேனர் வைப்பதுதான் தவறு. மேலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அ.தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சியின் போது தமிழை கூர்மையான வாளாக மாற்றாமல் கூழாங்கல் போல் வைத்திருந்தனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.