நீட் தேர்வால்  ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மருத்துவக் கல்வி கனவாகி விட்டது. நீட் டியூட்டோரியல்கள் காளான்களைப் போல முளைத்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99 சதவீத மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் வந்தவர்கள்தான்.

உக்ரைனில் கர்நாடகவைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வே காரணம் என்றும் நீட் தேர்வின் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்? என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். 

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் கொல்லப்பட்டார். நாட்டை சோகத்துக்குள்ளாக்கியது இந்த சம்பவம். இந்த மாணவரின் மரணத்துக்கு நீட் தேர்வு காரணம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாகர் குமாரசாமி வெளியிட்ட அறிக்கையில், “நீட் நுழைவுத் தேர்வு என்பது மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் கனவுகளைத் தகர்க்கிறது. நீட் தேர்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் மரணத்துக்கு இட்டுச்செல்கிறது. உயர்கல்வி என்பதே பணம் உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுவதும், இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுவதும் என்றாகிவிட்டது. 

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு அநீதி இழைக்கிறது. இந்தத் தேர்வின் பிரதிபலிப்பே உக்ரைனில் ஷெல் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம் ஆகும். நவீன் பத்தாம் வகுபில் 96 சதவீதம், பியூசியில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக மதிப்பெண் சதவீதத்தைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. இருந்தும் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்டதால், நவீன் தனது கனவை நனவாக்க உக்ரைன் சென்றார். அந்த இளைஞனின் மரணம், இந்தியாவின் `சுய மனசாட்சியை’ கேள்வி கேட்க வைத்திருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?

நீட் தேர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மருத்துவக் கல்வி கனவாகி விட்டது. நீட் டியூட்டோரியல்கள் காளான்களைப் போல முளைத்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99 சதவீத மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் வந்தவர்கள்தான். அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை என்றாகிவிட்டது. இந்த உண்மையை உணர்ந்துதான் டியூட்டோரியல்கள் சந்தையை விரிவுபடுத்தி, நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடுகின்றன. பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி அளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயிலும் 90 சதவீத மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட்டுப் பேசுவதற்கு இது நேரமில்லை. புதிய சர்ச்சை அல்லது விவாதத்துக்குகு வழிவகுக்கும் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட விரும்பவில்லை என்று மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை அவர் வெளியிடுவதன் பின்னணியில் உங்கள் நோக்கம் என்ன? அவரது இந்தக் கருத்து பல யூகங்களுக்கு வழிவகுக்கிறது.

அப்படியானால் நீட் பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு மத்திய அரசு ரகசிய ஆதரவு அளிக்கிறதா? நீட் தேர்வின் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்? நவீன் மரணம் நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம் ஆகும். புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒருமுறை இதயத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று குமாரசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.