ராஜராஜ சோழன் பற்றிய கருத்து சம்பந்தமான பிரச்சனையில், இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த காவல் துறையைக் கண்டித்து நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், ராஜராஜனின் ஆட்சிக்காலம் பட்டியலின மக்களுக்கு இருண்ட காலம் என்றுதான் நான் சொல்லுவேன். ராஜராஜ சோழன் யாருடைய சாதி என்று பலரும் போட்டி போடுகின்றனர். 

ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவனுடைய ஆட்சிக்காலத்தில்தான் மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் பட்டியலின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சாதி ரீதியிலான ஒடுக்குமுறை தொடங்கியதும் அவனுடைய ஆட்சிக்காலத்தில் தான் என்று விமர்சித்தார்.

ரஞ்சித்தின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழனை அவதூறாக விமர்சித்த ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி சார்பில் திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டதைப் போலவே பல்வேறு இடங்களில் ரஞ்சித் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

இன்னியில், நேற்று ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாகவே முன்வந்து பா.ரஞ்சித் மீது சாதி, மத, இன ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு தஞ்சை திருவாய்ப்பாடி பகுதியில், பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த திருப்பனந்தாள் காவல் துறையினரை கண்டிக்கும் வகையில் நீலப்புலிகள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போலீசார் செயல்படுவதாகவும், பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.