Asianet News TamilAsianet News Tamil

விண்ணை முட்டும் விலை.. உடனே கட்டுப்படுத்துங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!

 தமிழ்நாடு முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கட்டுமானப் பொருட்களின் அபரிமிதமான விலையேற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவைப்படின் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும்.

Need to control the rise in prices of construction materials... CM Stalin emphasis OPS
Author
Tamil Nadu, First Published Jun 9, 2021, 5:55 PM IST

அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனாவின் தாக்கம் கொடிகட்டிப் பறக்கின்ற நிலையில், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் கட்டுமானப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

Need to control the rise in prices of construction materials... CM Stalin emphasis OPS

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதாகவும், ஊரடங்குக்கு முன் 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது 500 முதல் 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதேபோல், 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது, 5,000 ரூபாய்க்கு விற்வனை செய்யப்படுவதாகவும், 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3,000 செங்கல், தற்போது 27,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 58,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி, தற்போது 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது 5,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Need to control the rise in prices of construction materials... CM Stalin emphasis OPS

ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், கட்டுமானப் பொருட்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துள்ளது. ஆனாலும், விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றது. ஒருவேளை ஊரடங்கு முடிந்தபிறகு கட்டுமானப் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், கட்டுமானப் பொருட்கள் பதுக்கப்பட்டு, அதன் காரணமாக, செயற்கையான விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

Need to control the rise in prices of construction materials... CM Stalin emphasis OPS

இதன் காரணமாக, கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கின்ற வீடுகளைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற, வீடுகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சிமெண்ட் விலை ஏற்றத்தினால், குறைந்த மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும், சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் 'அம்மா சிமெண்ட் திட்டம்' என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி, சலுகை விலையில், அதாவது ஒரு மூட்டை 190 ரூபாய் என்ற விலையில் ஏழை, எளிய மக்கள் சிமெண்ட் மூட்டைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்தார்கள் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Need to control the rise in prices of construction materials... CM Stalin emphasis OPS

எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கட்டுமானப் பொருட்களின் அபரிமிதமான விலையேற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேவைப்படின் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios