பலத்த போலீஸ் பாதுகாப்பு, தேர்தல் அலுவலர்களுக்கு முன்னிலையில் ஒருவரே 6 ஓட்டுக்கள் போட்ட விவகாரத்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.  

தருமபுரி மக்களவை தொகுதிக்கும், அதற்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலும் நடைபெற்றது. அங்கு நத்தமேடு பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், நத்தமேடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்போவதாக திமுக வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தருமபுரி தொகுதி மக்களவை வேட்பாளராக பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் களத்தில் இறங்கினார். அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த செந்தில்குமாரும் போட்டியிட்டார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் களமிறக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திருப்போரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில், பேசிய அன்புமணி ராமதாஸ், ‘வாக்குச்சாவடிகளில் நாம தானே இருப்போம், புரிகிறதா? என பேசினார். இதே கருத்தை தொடர்ந்து 3 முறை புரிகிறதா? என கேட்டு, நாம் மட்டுமே இருக்கும்போது என்ன நடக்கும்? என்று மறைமுக ஒரு விஷயத்தை தெரிவித்து இருந்தார்.