அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வரமாட்டேன் என்றும் பதவிக்கு வராமலேயே அதிமுகவை பாதுகாப்பேன் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் முதலமைச்சராகும் வகையில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராவதற்குரிய பணிகளில் ஈடுபட்டார்.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக்கப்பட்டார்.

சசிகலா குடும்பத்தினரின் அதிகார மையமே இந்த அனைத்து நிகழ்வுகளையும் செயல்படுத்தி வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய சூத்திரதாரியாக சசிகலாவின் கணவர் நடராஜனே செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா தஞ்சாவூரில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்றுப் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது என கூறினார்.

பலரும் கூறுவது போல தான் அதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன் என்று பேசிய நடராஜன், தான் பதவிக்கு வராமலேயே அதிமுக என்னும் இயக்கத்தை பாதுகாப்பேன் என தெரிவித்தார்.
திமுகவின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் இப்போது செயல்படாத தலைவராகி விட்டார் என்றும் நடராஜன் கிண்டல் செய்தார்.
