natarajan interview without caught any issues
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறது உண்மையோ பொய்யோ ஆனால் நடராஜனின் பரபரப்பான வாழ்க்கைக்கு முன்னால் அவரது மனைவி சசிகலா இருக்கிறார். ஆம் இவர் ‘சசிகலா நடராஜன்’தானே! தன்னோடு இல்லாத மனைவியின் வெறும் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதன் மிகப்பெரும் அதிகார மையமாக வலம் வர முடியுமென்கிற தனிமனித அரசியலை சாதித்துக் காட்டிய கில்லாடிதான் ‘எம்.என்.’ என்று கிசுகிசுக்கப்படும் எம்.நடராஜன்.
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது ’நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று சொல்லுமளவுக்கு ராஜாஜி ஹால், எம்.ஜி.ஆர். சமாதி வளாகம் போன்ற இடங்களில் சீன் செய்தார்.
இனி நடராஜனின் கண்ட்ரோலில்தான் அ.தி.மு.க. இயங்கும் என்று அவரை நோக்கி பொட்டி படுக்கையோடு கிளம்ப முடிவெடுத்தார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். ஆனால் அடுத்த நாளே ‘நான் திரும்ப போயிட்டேன்னு மறக்காம சொல்லிடு!’ என்றபடி ரகசியமாக எஸ்கேப் ஆகிவிட்டார். இடையில் என்ன நடந்ததென்பது சசிகலாவுக்கே வெளிச்சம்.

ஓ.பன்னீர் செல்வத்தின் சமாதி தியானத்திற்கு பின் அ.தி.மு.க.வில் என்னவெல்லாமோ நடந்து, எப்படியெல்லாமோ போய்க் கொண்டிருக்கும் நிலையில் இத்தனை மாதங்கள் கழித்து ’என்னது இந்திராகாந்தியை சுட்டுட்டாங்களா?’ என்று ஷாக் கேள்வியை கேட்பது போல் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் எம்.என்.
அவரிடம் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் நேரடியாகவோ, தைரியமாகவோ, திறந்த மனதுடனோ பதில்கள் வந்து விழவில்லை. பொத்தாம் பொதுவாகவும், கட்சிக்கு தன்னால் ஏதேனும் அசிங்கம் ஏற்பட்டுவிட கூடாது எனவும், அதே நேரத்தில் தான் ஒரு அதிகார மையம் என்பதை காட்டும் தொனியிலும்...இதையெல்லாம் தாண்டி பிரதமர் மோடிக்கு பக்காவாக கூஜா தூக்கியும் எம்.என். கொடுத்திருக்கும் ’நான் எஸ்கேப் ஆகிறேனே மம்மி’ பேட்டியின் ஹைலைட் சாராம்சங்கள் இதோ.......
* அ.தி.மு.க.வில் நடக்கும் குழப்பங்களை நான் வெறும் பார்வையாளனாக இருந்துதான் பார்க்கிறேன். பங்களிப்பாளனாக இருந்த போதிலும் சன்மானம் கேட்டதில்லை. எனவே நான் பங்களிப்பாளனாகவும் பேசலாம், பார்வையாளனாகவும் பேசலாம்.
* இப்போது அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்னைகளுக்கான காரணமானது உள்ளிருந்து வந்த பகை என்று நான் நினைக்கவில்லை.

* ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் வாய் திறக்காதவர்கள் இப்போது பேசுவது நடக்கிறது. ஒரு வேளை மறுபிறவி என்று இருந்தால், ஜெயலலிதா உயிரோடு வந்தால், இவர்கள் எங்கே ஓடி ஒளிவார்கள்? ஜெயலலிதா உயிரோடு வந்து பார்த்தால் திகைத்துப் போய்விடுவார். நாம் இல்லாத நேரத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிடும்.
* பேச்சு சுதந்திரத்தை இப்போது அவர்கள் பெற்றிருக்கிறார்கள், அடக்கிவைக்கப்பட்டவர்கள் பேசுகிறார்கள் இப்போது என்று சொல்லிட முடியாது. ஜெ., உயிரோடு இருந்தபோதே நான் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் சொல்லியிருக்கிறேனே!

* தமிழ்நாட்டை காவி மயமாக்க விடமாட்டோம் என்று பிரதமர் மோடியையோ, முன்னணி பா.ஜ.க. தலைவர்களையோ நான் விமர்சனம் செய்யவில்லை. சில சதி வேலைகளின் வெளிப்பாட்டை உணர்ந்து கொண்டு நான் அவ்வாறு பேசியிருக்கலாம். ஆனால் அது மோடிக்கோ அல்லது பா.ஜ.க. தலைமைக்கோ எதிரான பேச்சு அல்ல அது. சாமான்யர்களும் முதல்வராக முடியும் என அண்ணா நிரூபித்தார். அதுபோல மோடியும், சாமானியராக இருந்து பிரதமராகியிருக்கிறார். அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதையும், பற்றும் உண்டு.

* நான் அ.தி.மு.க.வுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் அதை ஜெயலலிதா ரெககனைஸ் செய்யவில்லை என்று நான் என் எதிர்ப்பை காட்டியது இல்லை. எதையும் டிமாண்ட் செய்யும் ஆள் இல்லை நான்.
2011 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுக்கான தேர்தல் அறிக்கையே என் வீட்டில்தான் தயாரிக்கப்பட்டது. அதை மின்னஞ்சலில் அனுப்பினால் ஹேக் செய்துவிடுவார்கள் என்று எண்ணி, பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ்., மற்றும் பொன்ராஜிடம் கொடுத்தனுப்பினேன். என்னை முன்னிலைப்படுத்தாமல் ஒதுங்கியிருப்பது என் சுபாவம்.
இப்படியாக ‘நம்பிட்டோம் சார்’ என்று நாம் தலையாட்டுமளவுக்கு பேட்டியில் பொய்யே இல்லாமல் மெய்யும், தைரியமும், நடுநிலையும் பொங்க பொளந்திருக்கிறார் எம்.என்.
