எதையெல்லாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் தனியாரிடம் ஒப்படைப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 4 நாட்களாக 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்புக்கான திட்டங்களை அறிவித்துவருகிறார். இந்தத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் குறைகூறிவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். 
 “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ரூ.20 லட்சம் கோடி நிதி உதவிகள் குறித்து பேசி வருகிறார். விவசாயம், மின்சாரம், அணுசக்தி துறை, விமான துறை, நிலக்கரி சுரங்கங்கள் குறித்தெல்லாம் அறிவித்துள்ளார். ராணுவ தளவாட முதலீட்டிலும் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க முயற்சிக்கிறார்கள். அரசு எதையெல்லாம் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள். இது ஜனநாயகத்துக்கு அழகல்ல. சிறு குறு தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் யார் மூலம் செயல்படுத்தப்போகிறார்கள் என்றும் தெரியவில்லை.” என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்கு நிலை குறித்து மது விற்பனை குறித்தும் பேசிய நாராயணசாமி, “ஊரடங்கு பிறப்பித்து 54 நாட்கள் ஆகிவிட்டன. பிரதமருடன் காணொளி மூலம் பேசியபோது ஊரடங்கு நீடித்தாலும்கூட சில தளர்வுகள் வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.எனவே என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம். மதுக்கடைகள் திறப்பது குறித்து புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டி விவாதித்த பிறகே முடிவெடுக்கப்படும்” என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.