அவல் எங்கே கிடைக்கும் என ஸ்டாலின் ஏங்கும்போது கமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதாகவும், ஊழல் நடக்கிறது என்றால் கமல் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, பீகார் மாநிலத்தை விட தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் உள்ளது எனவும், சிஷ்டம் சரியில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சி அமைச்சர்கள் பொங்கி எழுந்து தமது கருத்துகளையும் எச்சரிக்கைகளையும் கமலுக்கு விடுத்து வருகின்றனர்.

அதன்படி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காசு பணத்துக்காக கமல் எதையும் செய்வார் எனவும், அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், அமைச்சர் கடம்பூர் ராஜூ கமலஹாசன் ஆதாரமின்றி அரசு மீது குற்றம் சாட்டி வருவதை நிறுத்தி கொள்ளா விட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதேபோல் அமைச்சர் அன்பழகன் கமலஹாசன் எல்லாம் ஒரு ஆளே இல்லை, அவனுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது என ஒருமையில் பேசினார்.

இதைதொடர்ந்து மிரட்டல் விடுத்த தமிழக அமைச்சர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பதும் மிரட்டுவதும் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் எனவும், கமலின் கருத்து தமிழக மக்களின் கருத்து எனவும் தெரிவித்திருந்தார். 

இதற்கு கமலஹாசன் ”அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை எனவும், என் ஆதங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் தொடரும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் கொடுப்பதோடு ஸ்டாலினை சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மட்டுமே நடிகர்கள் கருத்து சொல்வதை ஜீரணிக்க முடியவில்லை எனவும், கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மிரட்டவும் கூடாது எனவும் தெரிவித்தார்.

தமிழ்திரைக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அது கமலால் மட்டுமே முடியும் என்றும் ஊழல் நடக்கிறது என்றால் கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவல் எங்கே கிடைக்கும் என ஸ்டாலின் ஏங்கும்போது கமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதாக நாஞ்சில் சம்பத் நையாண்டி செய்தார்.