இன்றோ, நாளையோ அதிமுக அம்மா அணியில் மாஃபா பாண்டியராஜன் இணையவுள்ளதாகவும், ஓபிஎஸ் இனி தனி மரமாகத்தான் நிற்பார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணியும், ஓபிஎஸ் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அணியும் செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறை சென்ற பிறகு அக்கட்சியின் பொறுப்பை டி.டி.வி.தினகரன் ஏற்றார்.

ஆனால் அவரும் சிறை சென்றதால் எடப்பா பழனிசாமி தலைமையில் அந்த அணி செயல்பட்டது. அதே நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் டி.டி.,வி.தினகரனுக்கு எதிராக திரும்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகனுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமி நேற்று மரணமடைந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் திவாகரனும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது இருவரும் கட்டித் தழுவி கண்ணீர்விட்டு அழுதனர்.

நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றும் அறிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இப்போது இருப்பது ஒரே அணிதான் என்றும், ஓபிஎஸ் தற்போது தனி மரமாக நிற்கிறார் என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்றோ, நாளையோ அதிமுக அம்மா அணியில் இணைவார் என குறிப்பிட்டார்.