Asianet News TamilAsianet News Tamil

30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..!! கதறும் சீமான்..!!

ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் கடும்கோபத்திலுள்ள மக்களின் கடும் எதிர்ப்பினையும், குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தினைப்போல் நாடு தழுவிய மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.

namtamilar party seeman warning central government regarding forest for private
Author
Chennai, First Published May 27, 2020, 11:26 AM IST

காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் நாம் தமிழர் கட்சியிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- கொரோனோ தீநுண்கிருமி நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. நதிநீர் ஆணையங்களை மத்திய புனலாற்றல் அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றது, இலவச மின்சாரத்தை இரத்து செய்யக்கூடிய வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை தன்வயப்படுத்தியது என மாநில உரிமைகளை வலுக்கட்டாயமாக பறித்து, மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற ஒரு உள்ளாட்சி நிர்வாக அமைப்பு போல மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து முயல்கிறது. மாநில தன்னாட்சிப் பற்றி வாய்கிழியப் பேசும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த அதிகாரப் பறிப்பு சதியினைக் கண்டும் காணாதது போல கடந்து செல்கின்றனர்; வாய்மூடி மௌனியாக உள்ளனர்.

namtamilar party seeman warning central government regarding forest for private

மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகாரத்தின் உச்சபட்சமாக கொரோனோ நோய்ப்பரவலால் உண்டான நாட்டின் பொருளாதார முடக்கத்தை காரணங்காட்டி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கவிருப்பதாக அறிவித்தது மோசமான நிர்வாகச்சீர்கேடு.ஒருபுறம், பிரதமர் மோடி தற்சார்பு என்று பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறத்தில், மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் மூலம் அனைத்து அரசுத்துறைப் பங்குகளையும் தனியாருக்கு விற்பதற்கான அறிவிப்பினை வெளியிடுகிறார். நாட்டினைத் தனியாருக்கு விற்பதாக பொதுவெளியில் அறிவித்தவர்கள் காட்டினைத் தனியாருக்கு விற்கும் முடிவை இரகசியமாகத் திட்டமிட தொடங்கியுள்ளனர் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 காடுகளைத் தனியார் திட்டங்களுக்காகத் தாரை வார்த்துள்ளது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

namtamilar party seeman warning central government regarding forest for private

அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இடு மிஷ்மி பழங்குடி மக்கள் வாழும் திபாங் பள்ளத்தாக்கு அதிக அளவில் புலிகள் உள்ளிட்ட பல்லுயிர்ச்சூழல் பெருக்கமுடைய வளமான வனப்பகுதியாகும். இந்த பள்ளத்தாக்கினை நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.பொது முடக்கத்தினை பயன்படுத்தி எவ்வித எதிர்ப்புமின்றி கடந்த மாதம் 23ம் தேதி இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அமைக்கப்படும் அணைகள், சுரங்கங்கள், பெரிய குழாய்கள், மின்நிலையம் மற்றும் சாலை ஆகியவற்றால் சுமார் 1,200 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கும் மேலான மரங்கள் அகற்றப்படும் சூழல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்தப் பள்ளத்தாக்கு ஒரு மிகப்பெரிய பேரழிவினைச் சந்திக்க நேரிடும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்ட இத்திட்டமானது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனப்பாதுகாப்புக் கொள்கைக்கு முரணாக உள்ளது.

namtamilar party seeman warning central government regarding forest for private

வெளிப்படைத்தன்மையின்றி திபாங் நீர்மின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த செய்தியானது அப்பகுதியில் வாழும் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவைத்தவிர, அசாமிலுள்ள டெஹிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புக்கல் சுரங்கம், கர்நாடகாவிலுள்ள ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் அமைத்தல் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த பொதுமுடக்க காலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டங்கள் மூலமாக 15 க்கும் மேற்பட்ட அழிந்துவரும் உயிரினங்கள் வாழும் பகுதிகள், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனப்பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இவற்றையெல்லாம் உணராமல் இலாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வருங்கால தலைமுறையினருக்குச் சொந்தமான காடுகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது பேராபத்தானது. 

namtamilar party seeman warning central government regarding forest for private

அரசுப்பொதுத்துறை நிறுவனங்கள் என்பவைகூட மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதர்களுக்கு சொந்தமானவை. ஆனால், காடுகள் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்கள் என்பது பூமியல் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானவை. அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதை நிறைவு செய்யும் சேவையாக இருக்க வேண்டுமேயன்றி , மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் வளமோடு வாழ்வதற்காக மற்ற அனைத்து உயிர்களையும் அவை வாழும் இடங்களையும், வளங்களையும் அழிப்பதென்பது சிறிதும் மாந்தநேயமற்ற கொடுங்கோன்மையின் உச்சமாகும்.எனவே, மத்திய அரசு உடனடியாகக் காடுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த முறையற்ற அனுமதிகளை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் கடும்கோபத்திலுள்ள மக்களின் கடும் எதிர்ப்பினையும், குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தினைப்போல் நாடு தழுவிய மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்களையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios