Asianet News Tamil

அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூடத் தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது: மார்பில் அடித்துக் கதறும் சீமான்

மணல் கொள்ளை மூலம் தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 

namtamilar party seeman condemned sand theft  and alert government
Author
Chennai, First Published Jun 22, 2020, 9:28 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள சிவகங்கை - இளையான்குடி - மானாமதுரை - திருப்புவனம்- பரமக்குடி- சாயல்குடி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்டக் கிராமங்களில் உவரி மண் – சவ்வூடு மண் அள்ளுவதற்கு அரசு அளித்திருக்கும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, பல இடங்களில் 30 அடிக்கும்மேல் மணலை அள்ளிச்சென்று கொள்ளையடித்து வரும் சமூக விரோதிகளின் கொடுஞ்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. இம்மணற்கொள்ளையைத் தடுத்து மணற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இக்கொள்ளைக்கு உடந்தையாக நின்று அவ்வளவேட்டைக்குத் துணைபோவது வெட்கக்கேடானது. 

மணல் என்பது இயற்கை அளித்த கொடை; பூமித்தாயின் மடி. அதுவே உலகின் தலைசிறந்த வடிகட்டியுமாகும். நீராதாரத்தைத் தக்கவைக்கும் பெரும் சேமிப்புக்கலனாகவும் அது விளங்குகிறது. அத்தகைய இன்றியமையாத மணல் தமிழகத்தின் அத்தனை ஆறுகளிலிருந்து திருட்டுத்தனமாக அள்ளப்பட்டுத் தமிழகத்தின் ஜீவநதிகள் யாவும் இன்றைக்குச் செத்துக் கொண்டிருக்கின்றன.அண்டை மாநிலமான கேரளாவில் மணல் கொள்ளை என்பதே முற்றிலுமில்லை என அறுதியிட்டுச் சொல்கிற அளவுக்கு அந்த மண்ணின் ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆந்திராவிலும், கேரளாவிலும்கூட மணல் அள்ளுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திலோ மணல் கொள்ளை மூலம் தமிழகத்தின் இயற்கை வளம் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திற்குரிய நீராதாரங்களைத் தடுத்து அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதற்குக்கூடத் தமிழகத்திலிருந்துதான் மணல் செல்கிறது என்பதன் மூலம் மணல்கொள்ளையின் கோரமுகத்தை அறிந்து கொள்ளலாம். 

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலர்களையும், அதிகாரிகளையும் சமூக விரோதிகள் அடித்துக்கொலை செய்கிறார்களென்றால் மணல் கொள்ளையர்களின் கை ஓங்கி அவர்கள் எந்தளவுக்கு திமிறி நிற்கிறார்கள் என்பதனையும், அவர்களுக்கு இத்தகைய துணிவு ஆட்சியாளர்களின் துணையில்லாது வந்திருக்குமா? என்பதனையும் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்படும் எத்தகைய ஆட்சி மாற்றமும் இந்த மணல் கொள்ளையர்களைப் பாதிப்பதில்லை. திமுகவின் ஆட்சியாக இருந்தாலும், அதிமுகவின் ஆட்சியாக இருந்தாலும் மணல் கொள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எவரும் இங்கு முடிவுகட்ட முனைவதில்லை. ஆற்று மணலைக் கொள்ளையடித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று அரசு ஒப்புக்குச் சொல்கிறதே ஒழிய, மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக இதுவரை செய்தியில்லை. மாறாக, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறவர்கள் மீதுதான் வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன என்பதன் மூலம் இவ்வரசுகள் யாருக்கானது என விளங்கிக் கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானூர் கிராமத்தில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளிவரும் மணல் கொள்ளையர்களின் 11 பார உந்துகளை சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததிற்காக சிவகங்கை வட்டாட்சியர் மயிலாவதி அவர்கள் அதனைச் சிறைப்பிடிக்க, பின்பு, அந்த பார உந்துகள் எவ்வித வழக்குமின்றி மேலிடத்து உத்தரவால் விடுவிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

அந்தளவுக்கு மணல் கொள்ளையர்களின் ஆதிக்கம் ஆட்சியதிகாரத்தில் கொடிகட்டிப்பறக்கிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள உப்பாறு, நாட்டார்கால், சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, விருசுழி ஆறு, பாம்பாறு, தேனாறு, நாட்டாறு ஆகிய 9 சிற்றாறுகளிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. அதேபோல, ஆற்றையொட்டியுள்ள பட்டா நிலங்களில் சவ்வூடு மண் பெயரில் 3 அடிக்குக் கீழே கிடைக்கும் மணலைக் கடத்தி வருகின்றனர். மணல் அள்ளும் உரிமையைக் குறிப்பிட்ட முகவர்களுக்கே அரசு வழங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் , குறிப்பிட்ட எல்லைவரை மணல் அள்ளலாம் என்ற விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிகள் யாவற்றையும் மொத்தமாய் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சுற்றுச்சூழல் சீர்கெடும் அளவுக்கு மணலை அடிவரை சுரண்டிக் கொள்ளையடிக்கும் இச்செயலில் சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.விதிமீறலையும், அபரிமிதச் சுரண்டலையும் கணக்கிலெடுக்கா அதிகாரிகள் அளிக்கும் அரசு ஆவணங்களிலுள்ள தகவல்களுக்கும், களத்தில் வெட்டி எடுக்கப்படும் மணலின் அளவுக்கும் இடையே இருக்கும் மலைக்கும், மடுவுக்கும் இடையேயான வேறுபாடு நடந்தேறும் பெரும் கொள்ளையைத் தெரியப்படுத்துகிறது.எனவே, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் இந்த மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், முறைகேடாக மணலை அள்ளி மிதமிஞ்சிய மணற்கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இந்த சட்டவிரோத மணற்கொள்ளையைத் தடுக்கத் தவறினால் பொதுமக்களை திரட்டி பெருந்திரள் மக்கள் போராட்டத்தையும், நீதிமன்றத்தை அணுகி சட்டப்போராட்டத்தையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios