கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சர்வதேச மருத்துவ அவசர நிலையாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்தும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மெத்தனப்போக்கோடு இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளுயிட்டுள்ள அறிக்கை விவரம் :-  சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 12000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரை இல்லாத வகையில் உலகையே உலுக்கி வரும் இந்தக் கொடிய வைரஸ் நோய், சீனா மட்டுமின்றி அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவி இன்று அதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது கவலையளிக்கிறது. இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு மட்டுமன்றி, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற எல்லா நாடுகளும் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிற இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடும், உலகின் மோசமான பொது சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றானதுமான இந்திய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தொடக்கம் முதலே இந்தப் பிரச்சனையை அணுகுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. 

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மற்ற மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படும் உச்சபட்சப் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் கூடிய நடைமுறைகளையோ, சர்வதேச சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நோய்த்தடுப்பு நடைமுறைகளையோ முறையாகக் கடைபிடிக்காமல், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும் வகையில் சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையங்களில் பயணிகள், பணியாளர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே வைத்து மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்வதும், பிறகு அங்கிருந்து வந்தவர்களை மக்கள் வசிக்கும் அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி வைப்பதும், நோய்த்தொற்று சந்தேகத்திற்கு இடமானவர்களை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே வைத்து சிகிச்சை அளிப்பதும் மத்திய, மாநில அரசுகள் இன்னும் இதன் தீவிரத் தன்மையை உணராததையே காட்டுகிறது.

தற்போது கரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்த அறிவிப்பிற்குப் பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது குறித்து நாட்டு மக்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காதது ஒரு அக்கறையற்றத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. கேரளாவில் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எந்தவித உடனடி தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது போல் தெரியவில்லை. 

மேலும், இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மேற்குறிப்பிட்ட குறைகளைக் கலைந்து, இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து வித நடவடிக்கைகளையும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும், மத்திய அரசு இப்பிரச்சனையை வெளிப்படைத்தன்மையுடனும், மிகுந்த கவனத்துடனும் முறையாக அணுகுமாறும், அரசு மேற்கொள்ளும் முறையான மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் மக்களிடமுள்ள இந்நோய் குறித்த அச்சத்தை அகற்றி நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.