namathu amma newspaper clarification
அதிமுக பாஜக உறவு தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்துகொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில், அதிமுக எப்போதும் இல்லை எனவும் நமது அம்மா நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மத்திய பாஜக அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுகிறதே தவிர, கட்சி ரீதியாக இல்லை என ஆட்சியாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், நமது அம்மா நாளிதழில், பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டதாகவும், கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியான இந்த கட்டுரை, சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என சில அமைச்சர்களும் தம்பிதுரையும் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரை தொடர்பாக இன்றைய நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக அதிமுக இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அல்லது அதில் வெளியாகும் அரசியல் கட்டுரைகளோ முடிவு செய்ய முடியாது. வாசகர் கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணி என்பது போன்ற ஒரு குழப்பத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ தலைமை கழக அறிவிப்புகள் இன்றி, நாளிதழில் வெளியாகும் கட்டுரைகளின் கருத்துக்கள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை இல்லை. பெரும் தொண்டர்களை கொண்ட அதிமுக கூட்டுத் தேடி அலைய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது காவிரி விவகாரத்தில் நல்லதொரு தீர்வை தரும் என்பதை சுட்டிக்காட்டவே மத்திய மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் குழப்பங்களை வித்திடும் வகையில் ஒப்புதலின்றி கட்டுரையை பிரசுரித்ததற்காக அதற்கு உரியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
