டி.டி.வி. தினகரனுக்கு வலது, இடது கரங்களாக இருந்த தங்க தமிழ் செல்வன் , இப்போது தினகரனுடன் கடும் மோதலை செய்துவிட்டு, வெளியேறி தி.மு.க.வில் இணைந்துவிட்ட நிலையில், தங்கத்தை தாறுமாறாக வெச்சு விமர்சனம் செய்ய துவங்கியுள்ளார் அமமுக மற்றும் அதிமுகவினர். 

அறிவாலய பேரங்கள்… அம்புட்டும் நாடகங்கள் என்ற தலைப்பில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேட்டில் தங்க தமிழ்ச்செல்வனை பற்றி எழுதியுள்ள தலையங்கத்தில், ஆமமூக்கன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அறிவாலயத்துக்கு விலை போயிருக்கிறார்.

அதில்; எதிர்பார்த்த ஒன்று தான். ஏற்கனவே பப்பீஸ் ஓட்டல் ஒப்பந்தப்படி திகார்கரனால் தி.மு.க.வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கலைராஜன் கம்பெனி, வெளியே வருபவர்களை விலைபேசி அழைத்து சென்று தி.மு.க.வில் சேர்ப்பது வரை அனைத்துமே முன்கூட்டி திட்டமிடப்பட்ட நாடகங்கள் என்பதை இந்த உலகமே அறியும்.

ஆமமூக்கன் கட்சியில் இருந்து விலகுபவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தால் மட்டும் தான் திருவாளர் திகார்கரன் ஆவேசப்படுவாரே தவிர வெளியேறி போகிறவர்கள் தி.மு.க.வில் போய் சேர்ந்தால் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியே.

மொத்தத்தில் மு.க. கட்சிக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர் தான் முட்டப் போண்டா என்பது இப்போது மொத்த கட்சிகளுக்குமே தெரிந்து விட்டது. நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி, கலைராஜன், அதைத்தொடர்ந்து இப்போது தங்க தமிழ்செல்வன் என அனைவருக்குமே அறிவாலயத்தை நோக்கி பாதை அமைத்துக் கொடுப்பது, எல்லாமும் தினகரனின் திட்டமிட்ட செயல்பாடுகள் தான்.

தினகரன் என்றாலே தினமும் உதிக்கிற சூரியன் என்பது தான். ஆக தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தையே தன் பெயராக வைத்திருக்கும் திருவாளர் டோக்கனார் ஒவ்வொருவராக அனுப்பி வைத்து விட்டு கடைசியில் அவருமே தி.மு.க.வில் ஐக்கியமாவார்.

அலைக்கற்றை ஊழலில் லாவகமாக தப்பித்து வந்த கனிமொழிக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்னது, ஜூன் 3-ந்தேதியான கருணாநிதி பிறந்தநாளில் ஆமமூக்கன் கட்சியின் அலுவலகம் திறந்தது,ஆர்.கே.நகரில் குக்கருக்கு எரிபொருளாக உதயசூரியனை பயன்படுத்தி தி.மு.க. அங்கே வழக்கமாக வாங்குகிற ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகளில் இருந்து சுமார் முப்பத்திரெண்டாயிரம் ஓட்டுகளை தனது குக்கர் சின்னத்துக்கு மடைமாற்றம் செய்தது, நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு உதவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்தது, இவற்றைத் தொடர்ந்து வருங்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகிய அனைத்திலும் தி.மு.க.வுக்கு ஏதுவாக தேர்தல் பணி செய்வது, அதற்கான மொத்த செலவுகளையும் பேசி முன்னதாக அதனை வாங்கிக் கொள்வது என்பவை தான் திருவாளர் துண்டுச்சீட்டுக்கும், திகார்கரனுக்கும் இடையிலான திரைமறைவு ஒப்பந்தங்கள்.

இதனை மறைப்பதற்கு திட்டுவது போல் திட்டுவதும், கொட்டுவது போல் கொட்டுவதும், மாறி மாறி குற்றங்கள் சுமத்திக் கொள்வதும், அத்தனையும் பித்தலாட்ட நாடகங்கள் தான். ஆனாலும் ஒன்று.. மக்கள் திலகமும், மகராசி தாயும் வெற்றிக்கொடி நாட்டிய ஆண்டிப்பட்டி தொகுதியை அள்ளித்தந்து, அரசியல் முகவரி தந்த வெள்ளந்தி தொண்டர்களை கொண்ட அண்ணா தி.மு.க.வை விட்டு அதன் நேர் எதிர் இயக்கமான தி.மு.க.வுக்கு தங்க தமிழ்செல்வன் விலை போயிருப்பது காலத்தால் மன்னிக்க முடியாத பாவ காரியம்.

மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைப்பு செயலாளர், இன்னும் இன்னுமாக ஏராள பதவிகள் தந்து ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்திருக்கும் தங்க தமிழ்செல்வனின் அரசியல் அஸ்தமனம் தொடங்கி விட்டது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்பதனை கழகத்து தொண்டன் கருணாநிதி கட்சிக்கு போயிருக்கும் தங்க தமிழ்செல்வனுக்கு உணர்த்திக் காட்டுவான் என்பது சத்தியம். என அதில் கூறியுள்ளார்.