பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருந்துவதைவிட, திருந்துவதே ரொம்ப முக்கியம் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா இதழின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

திரிபுரா மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்னர் புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் லெனின் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டது. புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் இன்று லெனின் சிலை... நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை என்று பதிவிட்டிருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த பதிவுக்கு மிகப்பெரிய கண்டனம் எழுந்தது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பெரியார் வழி தொடருவோரும் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுகவினர்
நேற்று தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடபட்டனர்.

ஹெச்.ராஜாவின் பதிவைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை நேற்று பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது. ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு வகையில் கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அந்த பத்வை நீக்கினார். அது குறித்து சில விளக்கங்களும் அவர் கொடுத்திருந்தார்...!

இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழின் தலையங்கத்தில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருந்துவதைவிட திருந்துவதே ரொம்ப முக்கியம் என்றும் அட்மின் தவறு என்று காரணம் கூறி கம்பி நீட்டுவதெல்லாம் நாணயமற்ற காரியமே என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.