நக்கீரன் வார இதழ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். 

தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி வரும் சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தமிழகத்தில் கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பாக அமைச்சர்களைத் தொடர்புபடுத்தி அவதூறு செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் வார இதழ் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குத் தொடுத்தார். 

அதில், கடந்த ஜூலை 29-ம் தேதி வெளியான நக்கீரன் வார இதழில், தன்னைத் தொடர்புபடுத்தி தவறான தகவல்களை தெரிவித்து, அவதூறாக செய்தி வெளியிட்டதால், அதன் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது வழக்கறிஞர் படையுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.