திமுக தமிழகம் முழுவதும் செயல்படுத்திய ஒன்றினைவோம் வா திட்டத்தை மாடலாக கொண்டு சென்னையில் மட்டும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த வாரம் துவங்கிய நாமே தீர்வு திட்டம் துவங்கியே வேகத்தில் முடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உணவு, உடை, மருத்துவ உதவி உள்ளிட்ட எந்த உதவி தேவைப்பட்டாலும் அவர்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உதவ நாமே தீர்வு எனும் திட்டத்தை கமலின் மக்கள் நீதி மய்யம் கடந்த வாரம் துவங்கியது. பாதிக்கப்பட்ட மக்கள் 6369811111 என்கிற செல்போன் எண் அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரினால் அதனை கிராஸ் செக் செய்து தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக ஒரு தனியார் நிறுவனம் அவுட் சோர்சிங் முறையில் மக்கள் நீதி மய்யத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆனால் இந்த நாமே தீர்வு திட்டத்தை துவங்கிய பிறகு பெரிய அளவில் தொலைபேசி அழைப்புகள் வரவில்லை என்கிறார்கள். காரணம் திமுக ஒன்றினைவோம் வா அறிவித்த போது ஊரடங்கால் தமிழகம் முடங்கியிருந்தது. ஆனால் மக்கள் நீதி மய்யம்  நாமே தீர்வு அறிவித்த போது ஒட்டு மொத்த தமிழகமும் இயல்பு நிலைக்கு கிட்டத்தட்ட திரும்பிவிட்டது. மேலும் உதவிகளை எதிர்பார்த்ததிருந்த மக்களும் பெரும்பாலும் சென்னையை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர்.

இதனால் நாமே தீர்வு திட்டத்திற்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. மேலும் உதவி கேட்ட ஒரு சிலருக்கும் அவர்கள் கேட்டதை செய்ய முடியாத நிலை இருந்ததாக சொல்கிறார்கள். இதற்கிடையே தொண்டு நிறுவனங்களும் கூட எதற்கு மக்கள் நீதி மய்யம் மூலம் நாங்கள் உதவி செய்ய வேண்டும், நேரடியாக நாங்களே தேவைப்படுவோருக்கு உதவி செய்து கொள்கிறோம் என்று பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாமே தீர்வை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.

மேலும் திட்டம் துவங்கிய போது அதனை புரமோட் செய்ய ஓடி ஆடி வேலை செய்த மக்கள் நீதி மய்யத்தின் பீ ஆர் டீம், அதன் பிறகு அதைப்பற்றி எந்த செய்திக்குறிப்பும் வெளியிடவில்லை. நாமே தீர்வை ஒதுக்கிவைத்துவிட்டு கமல் – ஏ.ஆர்.ரஹ்மான் உரையாடலை புரமோட் செய்யும் வேலையில் அவர்கள் பிசியானதால் திமுகவின் ஒன்றினைவோம் வா போல கமலின் நாமே தீர்வு எடுபடவில்லையாம். இதனைத்தான் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது என்று கூறி நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் திமுக இணையதள உடன்பிறப்புகள்.