வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழம் (ஏப்.18) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் சீமான், அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர மாதிரியில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான 'விவசாயி' சின்னம் தெளிவாக இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. எனினும், இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என அக்கட்சியின் வட சென்னை தொகுதி வேட்பாளர் காளியம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விளக்கமளித்திருந்த தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டு அனைத்து தொகுதிக்கும் அவை அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து ஒரு கட்சியின் சின்னம் வாக்காளர்கள் மனதில் இருந்தாலே அவர்கள் சரியாக வாக்குப்போடுவார்கள் எனக்கூறி வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.