தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னுக்கு தள்ளியுள்ளனர். 39 மக்களவை தேர்தலில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் நாம் தமிழரின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 

நாம் தமிழர் கட்சி கடந்த 2010-ம் ஆண்டு இயக்குநர் சீமானால் தொடங்கப்பட்டது. தமிழ் தேசியம், விவசாயம், நீர்மேலாண்மைக்கு இக்கட்சி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக இக்கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 1.1 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது.

 

இந்த மக்களவை தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அமமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளனர். சில இடங்களில் 3, 4-வது இடங்களை பிடித்துள்ளனர். 

கோவை தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். முந்தைய தேர்தலைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.