mythreyan face book ...reply to thambidurai

இபிஎஸ் –ஓபிஎஸ் அணிகளின் மனங்கள் இணையவில்லை என்பது தொண்டர்களின் உணர்வுதான் என்றும், தன்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் மைத்ரேயன் மீண்டும் தெரிவித்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுக எம்.பி. மைத்ரேயன் நேற்று தனது முகநூல் பக்கத்தில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் மனங்கள்? என ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார்.

இபிஎஸ் –ஓபிஎஸ் அணிகள் இடையே நிலவி வரும் பனிப்போர் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மைத்ரேயனின் இந்த முகநூல் பதிவு குறித்து, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை செய்தியளர்களிடம் பேசினார். அப்போது மைத்ரேயனின் முகநூல் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இரட்டை இலை சின்னத்துடனேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தம்பிதுரையின் கருத்துக்கு மைத்ரேயன் இன்று பதிலடி கொடுத்துள்ளார். மீண்டும் அவர் தனது முகநூல் பக்கத்தில் , நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்று தான் பதிவிட்டிருந்த எனது தனிப்பட்ட கருத்து அல்ல.பெரும்பாலான அதிமுக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் தான் எதிரொலித்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். 

இரு அணிகள் இணைந்தும், மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயன் மீண்டும் தனது கருத்தை அழுத்தமாக வலியுறுத்தியிருப்பது, மீண்டும் அதிமுக உடையுமா என அனைரையும் எதிர்பார்கக வைத்திருக்கிறது.