சார்பட்டா பரம்பரையின் பாக்ஸர் வடிவேலு மர்ம மரணம்... சிறைக்கைதிகளால் கொல்லப்பட்ட ஜெயிலர் ஜெயக்குமார்..!
உலக புகழ் குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் சென்னை வருகை பரம்பரைகளின் குத்துச்சண்டை வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோருக்கும் தான்.
1964 லிருந்து 1989 வரை வெல்ல முடியாத வீரராக இடியப்ப பரம்பரையை சேர்ந்த பாக்ஸர் பக்தன் கோலோச்சியிருக்கிறார். அதே போல சார்பட்டா பரம்பரையை சேர்ந்த பாக்ஸர் ஆறுமுகம் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக இருந்திருக்கிறார். இவர் 120 போட்டிகளில் கலந்து கொண்டு சுமார் 100 போட்டிகளில் எதிர் வீரர்களை நாக்கவுட் செய்திருக்கிறார். பின்னர் இடியாப்ப பரம்பரையை சேர்ந்த பக்தன், கே.ஜி.சண்முகம், டில்லிபாபு போன்ற சீனியர் வீரர்களிடம் மோதி அந்த ஆட்டங்களை டிரா செய்திருக்கிறார்.
சார்பட்டா பரம்பரையை தவிர்த்து மீதமுள்ள பரம்பரைக்காரர்கள் எல்லாம் அவர்களுக்குள் குத்துச்சண்டை போட்டிகள் வைத்துக் கொள்வதில்லை. எல்லா பரம்பரைகளும் மோத விரும்புவது சார்பட்டா பரம்பரையுடன் தான். சார்பட்டா பரம்பரை ஏரியாக்களாக, "இராயபுரம், மாடர்ன் லைன், சிமெண்ட்ரி ரோடு, வியாசர்பாடி, காசிமேடு, பனைமர தொட்டி, டோல்கேட், திருவொற்றியூர், கும்முடிப்பூண்டி" வரை இருந்திருக்கிறது. இடியப்ப நாயக்கன், எல்லப்ப செட்டியார் பரம்பரையின் ஏரியாக்களாக, "சூளை, புளியாந்தோப்பு, அடையாறு, இந்திரா நகர்" வரை இருந்திருக்கிறது.
இதில் நிறைய பேருக்கு சார்பட்டா பரம்பரையின் பெயர் காரணம் குறித்து அறிய ஆவல் இருப்பதை அறிய முடிகிறது. "ச்சார் + பட்டா.. என்பது தான் 'சார்பட்டா' என அழைக்கப்பட்டது. 'நான்கு கத்திகள்' என்பது சார்பட்டா என்பதன் பொருள் ஆகும். இந்த பரம்பரைக்கு அடித்தளமாக பாபு பாய் என்கிற பாக்ஸர் இருந்தார். பின்னர் சார்பட்டா பரம்பரையிலிருந்து பிரிந்து வந்து பாபு பாய், 'கறியாரா பாபு பாய் பரம்பரை' என ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.." என ஒரு பேட்டி ஒன்றில் எல்லப்ப செட்டியார் பரம்பரையை சேர்ந்த பாக்ஸர் பார்த்திபன் சொல்லியிருக்கிறார்.
அதே போல, பாக்ஸர் பக்தன் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், "சார்பட்டா என பெயர் வரக்காரணம் முஸ்லிம்கள் என்கிறார்". சார்பட்டா பரம்பரையில் முன்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் தான் இருந்தது என்கிறார் பக்தன். படிப்படியாக மீனவ மக்களை இணைத்து சார்பட்டா பரம்பரையை வலுவான குத்துச்சண்டை பரம்பரையாக உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பரம்பரையில் முக்கியமானவர்களாக சுந்தர்ராஜ், என்.மாசி, டி.டி.மாசி, கித்தேரி முத்து, அருணாச்சலம் போன்றோர் இருந்திருக்கின்றனர்கள்.
"பப்ளிக் பாக்சிங்" (தொழில்முறை பாக்சிங்), "அமெச்சூர் பாக்சிங்" என இரண்டுவகை இருந்திருக்கிறது. இதில் பப்ளிக் பாக்சிங் போட்டிகளில் பரம்பரைகள் சார்பாக காண்ட்ராக்ட்டர் மூலம் பணத்துக்காக சண்டையிட்டுள்ளனர். அமெச்சூர் பாக்சிங் போட்டிகளை பொறுத்தவரை அதில் வெற்றிபெற்றால் மெடல், கோப்பை, ரயில்வே வேலை என இன்னொரு மாதிரி இருந்திருக்கிறது. இப்படியான அமெச்சூர் பாக்சிங் வகைக்குள் பரம்பரைகள் தங்களை நுழைத்துக்கொள்ள விரும்பாமல் பரம்பரை கவுரவம் காக்க பப்ளிக் பாக்சிங் போட்டிகளிலேயே சண்டையிட்டு வந்திருக்கிறார்கள்.
குத்துச்சண்டை விளையாட்டுக்கு அவ்வளவு மதிப்பும் மரியாதையும் அந்த காலங்களில் இருந்திருக்கிறது. ஜாதி, மத மோதல்கள் அந்த விளையாட்டுக்குள் இருந்ததில்லை. ரிங்குகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டாலும் ரிங்குக்கு வெளியே பெரும்பாலான குத்துச்சண்டை வீரர்கள் பகைமை காட்டிக்கொள்வது கிடையாது. பின்னர் வந்த வீரர்களில் சிலர் குத்துச்சண்டை களத்தை தாண்டி முஷ்டி முறுக்கி ரவுடியிஸங்களில் ஈடுபட அதன் மூலம் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி 'பப்ளிக் பாக்சிங்' போட்டிகளுக்கு அப்போதிருந்த தமிழக அரசு 1990 களில் சென்னையில் தடை விதிக்கிறது.
சார்பட்டா பரம்பரையில் வந்த பாக்ஸர் வடிவேலு பின்பு ரவுடியிச பாதைக்கு சென்று மத்திய சிறையில் 1999 ஆண்டு டிசம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்து போக அப்போது சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக சிறைக்கைதிகளால் ஜெயிலர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். அன்றைய காலங்களில் குத்துசண்டைகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்த நேரத்தில் உலக புகழ் குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் சென்னை வருகை பரம்பரைகளின் குத்துச்சண்டை வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோருக்கும் தான்.
அமெரிக்காவில் கருப்பரின மக்களை ஒடுக்கி கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு எதிராக 'Black Lives Matter' என உக்கிரமாக குரல் கொடுத்தவர் முகமது அலி. அமெரிக்காவில் முகமது அலிக்கு சாத்தியப்பட்ட வெற்றி பல திறமையான சென்னை பரம்பரைகளின் முகமதலிகளுக்கு கிட்டவேயில்லை.