ஜாஸ் சினிமாஸ் பொறுப்புகளை ஏற்கும்படி சசிகலா தன்னிடம் கூறியதாகவும், எனது ஊழியர்கள் என்னைப் பற்றி பாராட்டிக் கூறினாலும், சசிகலாவிடம் இருந்து பாராட்டு கிடைக்காது என்றும் விவேக் ஜெயராமன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொது செயலாளரான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவருக்குப் பிறகு, ஆர்.கே.நகர் மூலமாக டிடிவி தினகரனும் முதலமைச்சர் கனவில் மிதந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளராக தினகன் இருந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு அதிமுகவை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்த நிலையில்தான், வருமான வரித்துறையின் சோதனைக்கு ஆளானது சசிகலா குடும்பம். கடந்த 9 ஆம் தேதி துவங்கிய வருமான வரித்துறையின் சோதனை 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

விவேக் வீட்டிலும், ஜெயா டிவியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பரோலில் வந்த சசிகலா, தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்
வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகியோர்களின் பெயர்களில் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு குறித்து பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்த பின்னரே சசிகலா குடும்பத்தினரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சசிகலாவின் குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் போயஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் பொறுப்புகளை கவனிக்கும் பணி எப்படி வழங்கப்பட்டது குறித்தும் பேசினார்.

விவேக் ஜெயராமன் கூறும்போது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜாஸ் சினிமாஸ் பொறுப்புகளை ஏற்கும்படி சசிகலா என்னிடம் கூறினார். பின்னர், ஜெயா டிவி பொறுப்புகளை கவனிக்கும் பணியும் தனக்கு வழங்கப்பட்டதாக கூறினார். தொழில் சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளையும் அவர் எனக்கு வழங்கினார் என்றும், எனது கருத்துடன் அவர் ஒத்துப்போக மாட்டார். எனது ஊழியர்கள் என்னைப் பற்றி பாராட்டிக் கூறினாலும், அவரிடமிருந்து பாராட்டு கிடைக்காது என்று கூறியுள்ளார். 

இதேபோல், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் எவ்வித சட்ட விரோத பணப் பரிமாற்றங்களும் நிகழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சத்தியம் குழுமம் தங்களது சொத்துக்களை பிவிஆர் நிறுவனத்திடம் விற்க விரும்பியது. அவர்கள் எங்களிடம் விற்பதில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இதற்கு முன்பாக நான் வருமான வரி ரெய்டை எதிர்கொண்டதில்லை. என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். எனது மனைவி நகை தொடர்பான விளக்கங்கள் மட்டும் பாக்கியுள்ளன. அவற்றையும் விரைவில் சமர்ப்பிப்பேன் என்றும் கூறியுள்ளார்.