ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் வரும் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.

இந்த விழாவை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் பேசினார். 

இவ்விழாவில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.இதையடுத்து  ஏறத்தாழ 8000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

.பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

அரசுப் பேருந்துகளில் ஜோதி, மதுபாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது, கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பேனர்கள் வைக்கவும் தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.