இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர பால்குடம் காவடி ஊர்வலம் அந்த வழியாக சென்றது.

ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த முருகன் காவடி ஊர்வலத்திற்கு அவர்கள் வழி விட்டு ஒதுங்கி ஒத்துழைப்பை வழங்கினர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொள்கை ரீதியாக எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் இஸ்லாமியர்கள் நடந்து கொண்டது மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் தலித்துகள் மற்றும் கிறிஸ்தவர்களை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது, முத்தலாக் தடை சட்டம், என்ஆர்சி, பாபர் மசூதி தீர்ப்பு, ஹிஜாபுக்கு தடை என அடுத்தடுத்த திட்டங்களும் சட்டங்களும் அதன்மீதான தீர்ப்புகளும் இஸ்லாமியர்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஹிஜாப் அணிவதற்கு தடை இல்லை என்ன தீர்ப்பு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் ஐந்து இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரித்துராஜ், கிருஷ்ணா தீக்ஷித், ஜெ.எம் ஹாஜி, ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் அவசியமான ஒன்று அல்ல, எனவே ஹிஜாபுக்கு கல்வி நிறுவனங்கள் விதித்த தடை செல்லும் என கூறியதுடன், மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்தது. இது நாடு முழுவதிலும் இஸ்லாமியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர பால்குடம் காவடி ஊர்வலம் அந்த வழியாக சென்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் ஊர்வலத்திற்கு வழிவிட்டு ஒத்துழைப்பு வழங்கினர் இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. இது தான் தமிழ்நாடு, இதுதான் பண்பட்ட தமிழ்நாடு, சமூக நீதி மண் என பலரும் பாராட்டி வருகின்றனர்.