முரசொலி பவளவிழா… நடிகர் ரஜினிகாந்த்துக்கு நினைவுப் பரிசு வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

முரசொலி நாளிதழின் பவளவிழா விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார்.

திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலி  பத்திரிகை இன்றுடன் 75 ஆண்டுகளை  நிறைவு செய்துள்ளது.

இதற்கான பவளவிழா  2 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி  இன்று காலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்து என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த வாழ்த்தரங்கில் பல்வேறு நாளிதழ் மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்கள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்த விழாவில் பார்வையாளராக பங்கேற்ற  நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.