முரசொலி அலுவலக நிலம் குறித்து அவதூறு பரப்பிய ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு தகவலை வெளியிட்டார். இதையடுத்து, பஞ்சமி நிலம் அல்ல என்பதற்கான ஆதாரமும், விளக்கமும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதனையடுத்து, ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் மீது எழுப்பூர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை என்றழைக்கப்படும் முரசொலி மீது அவதூறாக பேசிய டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அந்த நோட்டீசுக்கு இருவரும் பதில் அளிக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தோம்.

அதில் 83 ஆண்டுகளுக்கான முரசொலி நிலத்தின் பட்டா மற்றும் மூலப்பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். அவர்கள் இருவரும் கௌரவம் மற்றும் ஆணவம் பார்க்காமல் தங்களது கருத்துக்கு மன்னிப்புக் கோரினால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.