அண்மையில் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய அரசின் அறிக்கை படி சோனியா காந்தியின் உயிருக்கு விடுதலைப்புலிகளாலால் ஆபத்து இருப்பதாகவும் அதனால் பழைய பாதுகாப்பையே மீண்டும் வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இலங்கையில் ராஜபக்சே குடும்பம் மீண்டும் பதவியேற்றிருக்கும் நிலையில் தமிழக எம்பி ஒருவரின் இந்த பேச்சு ஈழத்தமிழர்களுக்கு மேலும் ஆபத்தை உண்டாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டிருந்தனர். இந்தநிலையில் டி.ஆர்.பாலுவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக முரசொலி நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி விடுதலைப்புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அந்த அமைப்பின் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடித்தது. இந்தநிலையில் தற்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறி சோனியாகாந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளதையே பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாக முரசொலி நாளிதழில் கூறப்பட்டிருக்கிறது.