மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்று ஆறு நாட்களே ஆன நிலையில் அனைத்தும் காவி மயமாகி வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அட்டையில் ஒரு பெண் நடனமாடுவது போன்ற காட்சி, கோவில் படங்கள் மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போல படம் அமைந்துள்ளது. 

இதுதொடர்பாக தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது. மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது’’ என குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், ‘’பாரதியார் காவி தலைப்பாகையுடன் இருப்பதை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறேன். நான் நீண்ட காலமாக மாணவர்களுக்கு தமிழ்பாடம் கற்றுக்கொடுத்து வருகிறேன். அவர் காவி தலைப்பாகை அணிந்த படத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. அவர் எப்போதுமே வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தார். ஏற்கனவே வரலாற்று புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய வி‌ஷயங்கள் இருந்ததால் அவை நீக்கப்பட்டன. இப்போது பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வி‌ஷயம் இடம்பெற்றுள்ளது. அட்டை படத்தில் இந்து கோவில் படத்தை அச்சிட்டு இருக்கிறார்கள். இது இந்துக்கள் மட்டும் தான் தமிழுக்கு பாடுபட்டவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

கிறிஸ்தவர்களாக இருந்த வீரமாமுனிவர், ஜி.யூ. போப் போன்றவர்கள் தமிழுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல முஸ்லிமான உமறுபுலவரும் தமிழக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர்’’ என்று கூறினார்.