முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்.பி. குரிய கோஷ் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்தார் அவர் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் தலைமைப் பொறியாளர், தமிழகம், கேரள அரசின் இரு உறுப்பினர்கள் என் 3 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்டார்கள். 

அணைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தியுள்ளார்கள், நீர்பிடிப்பு பகுதிகள், கருவிகளின் செயல்பாடு, வளைவுப்பகுதி, நீர் வருகை கணக்கீடு முறை ஆகியவை குறித்து ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனையின் முடிவில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

முல்லைப்பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கான, முன்கட்டுமான திட்டங்களைத் தயாரிக்கச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் குறிப்புகளை வழங்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார்