முலாயம் – அகிலேஷ் சந்திப்பு… குடும்ப நாடகம் முடிவுக்கு வருமா ?

முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டதையடுத்து கடந்த சில நாட்களாக சமாஜ் வாடி கட்சியில் நிலவி வந்த குடும்ப நாடகம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

இம்மாத இறுதி அல்லது பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் குடும்ப சண்டை காரனமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் அரங்கேறி வருகிறது.

சமாஜ் வாடி கட்சியின் நிறுவனர் முலாயமின் தம்பி சிவபால் யாதவுக்கும் முதலமைச்சர் அகிலேசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. அகிலேஷ் யாதவுக்கும், சிவபால் சிங்குக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், தற்போது கட்சியையே பிளவுபடுத்தி விட்டது.

இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில், தேசிய தலைவர் பதவியை கைப்பற்றிய அகிலேஷ் யாதவுக்கு, முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் பக்க பலமாக உள்ளார்.

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆனையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அமைச்சர் ஆசம்கான் மேற்கொண்ட முயற்சியால்

டெல்லியில் இருந்து முலாயம் சிங், லக்னோவில் உள்ள அகிலேஷ் யாதவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.பின்னர் இருவரும் லக்னோவில் சந்தித்து 2 மணி பேசினர்.

இதையடுத்து இரு தரப்பிலும் சமரச திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.அதன்படி முலாயம் சிங் மீண்டும் கட்சியின் தேசிய தலைவர் பதவி ஏற்பார் என்றும் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் அவருக்கு அகிலேஷ் யாதவ் உதவுவார் என்றும் கூறப்படுகிறது.

சிவபால் சிங்குக்கு கட்சியில் தேசிய பொறுப்பு அளிக்கப்படும் என்றும் மோதலும் முடிவுக்கு வரும் எனவும் தெரிய வந்துள்ளது.