சசிகலாவால் பயனடைந்தவர்கள் அனைவரும் அவர்களின் சொத்துக்களையும் பதவிகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், சசிகலாவால் யாரும் பயனடையவில்லை என அமைச்சர்கள் அவரவர் குழந்தைகளை போட்டு தாண்ட வேண்டும் எனவும் எம்.பி.நாகராஜன் தெரிவித்துள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அவருக்கு எதிராக எடப்பாடி தலைமையிலான அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. 

ஆட்சியை காப்பாற்றி கொள்ள பிரிந்து சென்ற ஒபிஎஸ்சை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து கொண்டார் எடப்பாடி. மேலும் ஒபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்று துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமனம் செய்யப்பட்ட டிடிவியையும் ஓரங்கட்டினார். 

இதனால் டிடிவி ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்சியின் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது எடப்பாடி அரசு. 
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொதுக்குழு செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்.பி நாகராஜன், சசிகலாவால் பயனடைந்தவர்கள் அனைவரும் அவர்களின் சொத்துக்களையும் பதவிகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், சசிகலாவால் யாரும் பயனடையவில்லை என அமைச்சர்கள் அவரவர் குழந்தைகளை போட்டு தாண்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

மேலும் அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்து யாரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ளவில்லை எனவும், சசிகலா மூலமே பயனடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.