mps asking cbi enquiry for jaya death

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான பி.ஆர்.சுந்தரம் மீண்டும் வலியுறுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பி.ஆர்.சுந்தரம்

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள், அது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த எம்.பி.யான பி.ஆர்.சுந்தரம் நேற்று மீண்டும் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

சி.பி.ஐ. விசாரணை

அவர் பேசுகையில், ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 75 நாட்களும் அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. நீர்ச்சத்து குறைவு மற்றும் காய்ச்சலால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மர்மமான சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

அவருக்குப் பதில் அளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் கூறியதாவது மிகுந்த கவலை

‘‘தமிழக முன்னாள் முதல்-அமைச்சரின் திடீர் மறைவு, இந்த அவைக்கும் நாட்டுக்கும் மிகுந்த கவலையளிக்கும் நிகழ்வாகும். சந்தேகத்துக்கு இடமான சூழ்நிலையில் அவருடைய மரணம் நிகழ்ந்திருப்பதாக ஒரு உணர்வு நிலவுகிறது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து மாநில அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே அந்த விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் மத்திய அரசால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.