மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் தரப்பில் ரவீந்தரநாத் குமார் இடையே போட்டி நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையில் புகுந்து புதிதாய் குடைச்சல் கொடுக்க கிளம்பி இருக்கிறார் மைத்ரேயன். 

ஆர்.எஸ்.எஸ். லாபி மூலம் ராஜ்யசபா சீட் ப்ளஸ் மத்திய அமைச்சர் பதவி பெற கமுக்கமாக முயற்சித்து வருகிறார் மைத்ரேயன். பாஜகவின் மூத்த தலைவராக இருந்தவர் மைத்ரேயன். பின்னர் அதிமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.யானார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. அதிமுக பிளவுபட்ட போது ஓபிஎஸ் அணியில் இருந்தார். அதிமுக அணிகள் இணைந்த பின்னரும் மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார்.

தமது ஆதங்கத்தை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இதனால் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருவதில் துணை முதல்வர் ஓபிஎஸ் முயற்சித்துப் பார்த்தார். ஆனால் சீனியர் எம்.பி.யான எனக்குத்தான் அமைச்சர் பதவி வேண்டும் என வைத்திலிங்கம் மல்லுக்கட்டினார். இதனால் அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் இருதரப்புமே அமைச்சர் பதவியை பெற்றுவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. 

இந்த களேபரத்துக்கு மத்தியில் தமது ஆர்.எஸ்.எஸ். லாபி மூலம் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாவதுடன் அமைச்சர் பதவியையும் பெற்றுவிட முடியாதா? என முயற்சித்து வருகிறார் மைத்ரேயன். அவர் அதிமுகவில் எம்.பி.யாக இருந்தாலும் அவரை பாஜகவின் முகமாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். இதையே தங்களுக்கு சாதகமாக நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். தரப்பு. இதைவைத்துதான் ராஜ்யசபா சீட், அமைச்சர் பதவி என லாபி செய்து வருகிறார்.

அதனை உறுதி படுத்தும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஜெயலலிதா தனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பதிவிட்டு இருக்கிறார் மைத்ரேயன். அதில், ‘’சென்ற ஆண்டு இதே நாள் நான் செய்த பதிவு. பலர் படித்து விட்டு மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் என்றும் மறக்க மாட்டேன். இன்று அதையே மீண்டும் பதிவு செய்கிறேன். ஆறு ஆண்டுகள் நிமிடமாக கழிந்து விட்டன. 10/06/2013 ஐ என்னால் மறக்க முடியுமா? கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு 2001 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அம்மா அவர்கள் வாய்ப்பு தந்தார்கள். அன்று நான் வெற்றி பெற்றிருந்தால் 2001 ல் நான் தான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்று 2000 செப்டம்பரிலேயே அம்மா என்னிடம் சொல்லி இருந்தார்கள். ஆனால் வெற்றி என்னை விலகிச் சென்றது.
 
2001 ஆகஸ்ட் 30 ம் தேதி மூப்பனார் மறைவுக்குப் பிறகு மாநிலங்களவையில் ஏற்பட்ட காலியிடத்திற்கு அம்மா என்னை அனுப்பினார். 2002- 2004 மாநிலங்களவையில் முதல் முறை. பிறகு 2007-2013 அம்மா அவர்கள் என்னை இரண்டாவது முறை மாநிலங்களவைக்கு அனுப்பினார். எனவே 2013 ஜூன் என் பதவி நிறைவடையும் போது நிச்சயம் மீண்டும் கிடைக்காது, கழகத்தில் எண்ணிலடங்காதோர் இருக்கும் போது மூன்றாவது முறை எதிர்பார்ப்பது நியாயமில்லை என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்

தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் ஆசை யாரை விட்டது, மீண்டும் அம்மா எனக்கு மூன்றாவது முறை எம்பி பதவி கொடுப்பார்களா என்ற நப்பாசை, ஆதங்கம், எதிர்பார்ப்பு, எனவே பதட்டம். 2013 ஜூன் 10ம் தேதி அம்மா அவர்கள் மத்திய திட்டக் கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வருகிறார். டெல்லி விமான நிலையத்தில் அம்மா அவர்களை வரவேற்க எம்பிக்கள் வரிசையில் நிற்கிறோம். எனக்கோ ஒரே படபடப்பு. எனக்கு நானே ஒரு பரிட்சை வைத்துக் கொள்கிறேன். அம்மா அவர்களுக்கு நான் பூங்கொத்து கொடுக்கும் போது என்னைப் பார்த்து புன்னகைத்தால் எனக்கு கிடைக்கும் என்று தேர்வு வைக்கிறேன்.

அம்மா அவர்களின் கார் வருகிறது. நான் பூங்கொத்து கொடுக்கிறேன். அம்மா வாங்கிக் கொள்கிறார். ஆனால் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் நொறுங்கி விடுகிறேன். தமிழ்நாடு இல்லம் வருகிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரதனும் ராஜாவும் ஒரு சீட்டுக்காக அம்மாவைப் பார்த்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எம்பிக்கள் அருகில் உள்ள கவர்னர் சூட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 

திடீரென்று சென்னையில் இருந்து மயிலாப்பூர் 115 வது வட்ட செயலாளர் பார்த்தசாரதி கைபேசியில் எனக்கு வாழ்த்து கூறி அம்மா அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியுள்ளார் என்று சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அதன் பின்னர் அம்மா அவர்கள் திட்டக் கமிஷன் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார். நாங்கள் அனைவரும் முன்கூட்டியே யோஜனா பவன் சென்று அம்மாவிற்காக காத்திருக்கிறோம். 

அம்மா அவர்கள் காரில் இருந்து இறங்கி வருகிறார். நான் உணர்ச்சிப்பெருக்குடன் என் தலைக்கு மேலே இரு கரங்களையும் கூப்பி வணங்குகிறேன். இப்போது அம்மா அவர்கள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த புன்னகைக்கு நான் என்ன தர முடியும்? அம்மா அவர்களை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்குவது தான் நான் அம்மா அவர்களுக்கு காட்டக்கூடிய நன்றி. கழகத்தின் வரலாற்றில் வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அம்மா அவர்கள் எனக்கு மூன்றாவது முறை எம்பி பதவி அளித்தது. அந்த நாள் தான் இந்த நாள்'' எனப்பதிவிட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்பு இடையே புகுந்து ஆப்பு வைக்கத் தயாராகி வருகிறார் மைத்ரேயன்.