தினகரனின் அமமுகவை கூட்டணி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒதுக்கி வைத்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாகி வருகிறது.

தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைக்க உள்ளது. ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆனால் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வென்று தற்போது அ.ம.மு.க என்று கட்சி நடத்தி வரும் தினகரனுடன் கூட்டணி தொடர்பாக பேசக்கூட யாரும் முன்வரவில்லை என்று தகவல் வெளியானது. 

ஆனால் தற்போது தே.மு.தி.க., கமலின் மக்கள் நீதிமய்யம், வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தி.மு.க – அ.தி.மு.கவுக்கு மாற்றான கூட்டணி என்கிற ஒரு பேச்சை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தே.மு.தி.கவை பொறுத்தவரை தி.மு.கவிடம் இருந்து அழைப்பே வரவில்லை. அ.தி.மு.கவை பொறுத்தவரை 2 சீட்டுகள் தான் என்று தே.மு.தி.கவிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். 

இதனால் தே.மு.தி.க, தி.மு.க – அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடனுமே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். இதே போல் மக்கள் நீதிமய்யம் கட்சியையும் சீண்டுவார் யாரும் இல்லை. இதனால் கமல் கடும் எரிச்சலில் உள்ளார். மேலும் தி.மு.கவை பழிவாங்கும் விதமாக 3வது அணி அமைப்பதற்கான முயற்சியில் கமல் இறங்கியுள்ளார். 

வாசனை பொறுத்தவரை அவருக்கும் பெரிய அளவில் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணயில் வரவேற்பு இல்லை. இதனால் அவரும் யாருடன் கூட்டணி என்பதில் குழப்பமாக உள்ளார். இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் அதிருப்தியில் உள்ள கட்சிகள் எல்லாம் இணைந்து 3வது அணி அமைப்பதற்கான சூழல் அமைந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள தினகரன் தயாராகி வருவதாகவும், அனைத்து கட்சியினருக்கும் தூது அனுப்பி வருவதாகவும் சொல்கிறார்கள். 

கூட்டணி குறித்து சுதீஷ் – தினகரன் இரண்டு முறை செல்போனில் பேசியுள்ளதாகவும், வாசனிடமும் தினகரன் தரப்பில் பேசியுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் கமலையும் தினகரன் தரப்பு அணுகும் என்கிறார்கள். இப்படி ஒரு அணுகுமுறை உருவாகும் பட்சத்தில் தினகரன் – கமல் –விஜயகாந்த் – வாசன் என கூட்டணிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் திருமாவளவனும் கூட இங்கு இணைய வாய்ப்புகள் இருக்கிறது.

வைகோவம் கூட ஸ்டாலின் மீதான பழையை பகையை மனதில் கொண்டு இந்த முறையும் 3வது அணிக்கு தாவினாலும் ஆச்சரியம் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த கூட்டணிக்கு தலைமை யார்? என்கிற கேள்வி தான் கூட்டணிக்கான எதிரியாகவும் இருக்கும் என்கிறார்கள்.