சசிகலாவுக்கும்  தினகரனுக்கும்  இடையேயான விரிசல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூரில் தங்கி உள்ள திவாகரன் மகன் அதை இன்னும் பெரிது படுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், தினகன் மீதுள்ள கோபத்தை சரிசெய்யும் விதமாக, தஞ்சையை சேர்ந்த சினிமா பிரமுகர் ஒருவர் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேசி சமரசம் செய்துள்ளார். 

சிறையில் சசிகலாவை பார்த்து கண்கலங்கிய சினிமா பிரமுகரிடம், அரசியல் நிலவரங்கள் பற்றி தெளிவாகக் கேட்டு அறிந்துள்ளார் சசிகலா.

தினகரன் பற்றிய பேச்சு வந்தபோது, அவனைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று சசிகலா கோபப்பட்டுள்ளார். ஆனாலும் பொறுமையாக பேசி அவரை தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார் சினிமா பிரமுகர்.

தினகரன் செய்வதெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும், அவர் எத்தனை காலம் உங்களுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். அதில் குறை சொல்ல முடியுமா?

மன்னார்குடி குடும்பம் என்று மற்றவர்கள் விமர்சனம் செய்வதை பார்த்தால், மறுபடியும்  பன்னீர் போன்ற நம்பிக்கை துரோகியிடம் போராடும் நிலைதான் நமக்கு வரும்.

ஆர்.கே.நகரில் அவர் ஜெயித்தால், அது அவருக்கான வெற்றியல்ல. உங்களுக்கான வெற்றிதானே அது.

உங்கள் பெயரை அவர் தேர்தலில் பயன்படுத்தினால், அதை வைத்தே எதிர் கட்சிகள் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் அவர் உங்கள் பெயரை தவிர்த்து வருகிறார். 

உங்கள் குடும்பத்தை சேர்ந்த  ஒவ்வொருவரும், தனித்தனியாக, அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டி படைக்கிறார்கள். அதனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர்தான் வரும்.

அவர்களுக்கு எது வேண்டுமோ, அதை தினகரனிடம் சொல்லிவிட்டால், அவர் செய்து கொடுக்க தயாராகத் தானே இருக்கிறார். அவர்கள் ஏன் அதில் கெவ்ரவம் பார்க்க வேண்டும். 

இப்போதுள்ள நிலையில், தினகரன் உங்களை சந்தித்தால், அது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உண்டாக்கும். அதனால்தான் அவர் இங்கு வரவில்லை என்று சென்டிமெண்டாக பேசியுள்ளார் சினிமா பிரமுகர்.

இதையெல்லாம், தினகரனே என்னிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே? என்று பிடிகொடுக்காமலேயே, சசிகலா அவரிடம் பேசி உள்ளார்.

அதற்கும், சில சம்பவங்களை உதாரணமாகக் கூறி சசிகலாவை சமரசம் செய்துள்ளார் சினிமா பிரமுகர்.

பின்னர், ஒரு வழியாக சமாதானம் ஆன சசிகலா, எப்படியோ களம் இறங்கி ஆகிவிட்டது, எனவே அவனை எல்லோரிடம் அனுசரித்து போக சொல்லுங்கள். என்னிடம் புகார் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சசிகலா கண்டிப்புடன் கூறி இருக்கிறார். 

அப்பாடா.. தூது போன காரியம் நினைத்தது மாதிரியே முடிந்து விட்டதில் மகிழ்ந்த சினிமா பிரமுகர், அதை தினகரனிடம் சொல்லி அவரையும் உற்சாகப்படுத்தி உள்ளார்.

ஆனால், இதை கேள்விப்பட்ட திவாகரன் தான், ஆத்திரத்தில் வானத்திற்கும், பூமிக்கும் எகிறிக் குதித்துள்ளார்.

என் மகன் மூலம், நான் படாத பாடு பட்டு, பல நாட்களாக உருவாக்கிய தினகரன் மீதான வெறுப்பை, இந்த சினிமாக்காரன் ஒரே நாளில் உடைத்து உரு தெரியாமல் ஆக்கிவிட்டானே என்று கொந்தளித்துள்ளார்.

யாரை கேட்டு இந்த சினிமாக்காரன் அங்கே போனான். அவனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று சினிமாகாரர் மீது திவாகரன் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.