ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை கிண்டியில் கிங் ஆய்வகத்துக்கு அருகில் அமைந்துள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 படுக்கை வசதியில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை கிண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக் கூடம், வைஃபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் கூறியுள்ளார்.