ஆண்டிபட்டியில் வருமான வரித்துறை கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எங்ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஆண்டிப்பட்டியில் நேற்றிரவு அமமுக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக வருமான வரித்துறைக்கும், தேர்தல் பறக்கும் படையினர் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோதனை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருக்கு ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் வேட்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்று விதி நடைமுறையில் இருக்கிறது. அந்த விதியையும் மீறி, தங்கதமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகர் அமரேஷ் என்பவருக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது அவரது இடத்தில் நாங்கள் பணம் பதுக்கி வைக்க முட்டாள்களா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை கைப்பற்றியதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வருமானவரி துறையினர் திட்டமிட்டு நடத்தும் சதி. துணை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரின் ஆட்டம் நடக்கிறது.  மேலும் அதிமுகவும் தேர்தல் ஆணையம் இணைந்து இதுபோல நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. எங்கள் மீது வழக்கு பதிந்தாலும் அதை சட்டப்படி சந்திக்க தயார் என தங்க தமிழ்செல்வன் கூறினார்.