கருணாநிதியின் ஆசியுடன் விரைவில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என தெலுங்கு நடிகர் மோகன் பாபு வாழ்த்து தெரிவித்தார்.

திரையுலகினர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் புகழுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரையுலகினர் சார்பில் ”மறக்க முடியுமா கலைஞரை” என்ற பெயரில் புகழாஞ்சலி செலுத்தும் விழா கோவையில் நடந்துவருகிறது. 

இந்த விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். நடிகர்கள் சிவக்குமார், ராதாரவி, சத்யராஜ், பார்த்திபன், மயில்சாமி, மோகன் பாபு(தெலுங்கு நடிகர்), நடிகை ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணநிதியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கருணாநிதி என்ற பெயருக்கு விரிவாக்கம் கூறினார். மு.கருணாநிதி என்ற பெயரில் மு என்றால் முன்னுதாரணம், க என்றால் கருணை, ரு என்றால் ருத்ரம், ணா என்றால் நாஸ்தீகம், நி என்றால் நிதானம் மற்றும் தி என்றால் திராவிடம் எனக்கூற, கரகோஷம் அதிர்ந்தது. 

கருணாநிதி சிறந்த தலைவர். அவர் கிடைத்ததற்கு தமிழக மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மறைந்த அண்ணாவின் இதயத்தில் இருந்த கருணாநிதி, தற்போது அவருடன் மயானத்திலும் உள்ளார் என்றார். அண்ணாவையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது. கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு ஸ்டாலின் முதல்வராவார். அனைவரும் ஒன்றாக இருந்து ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என மோகன்பாபு தெரிவித்தார்.