மேக் இன் இந்தியா குறித்த பிரதமர் மோடியின் குரல் சிங்கத்தின் குரல் அல்ல, இது எலியின் சத்தத்தைக் காட்டிலும் குறைவானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். 

பேசாத பிரதமர்

உத்தரப்பிரதேசம் ஆசம்கார்க் பகுதியில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், “ ராகுல் காந்தி மோடி அரசு நாட்டுக்காக என்ன செய்தது என்று அடிக்கடி கேட்டு வருகிறார்.

முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் இந்த நாட்டுக்கு பேசும் பிரதமரை கொடுத்துள்ளோம். நீங்கள் கொடுத்த பிரதமர் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்தார்.

10 ஆண்டுகளாக நீங்களும், உங்கள் தாயாரும் மட்டுமே அந்த குரலை கேட்டு இருப்பீர்கள்'' என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக ராகுல் பேசினார்.

மேக் இன்இந்தியாவா?

பாரெய்ச் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்திபேசுகையில், “ நீங்கள் கூறும் அந்த அடுக்குமொழியால் என்ன பயன் இருக்கப்போகிறது?. மேக் இன் இந்தியா பிரசாரம் செய்கிறார் மோடி, ஆனால், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்தான்கிடைக்கிறது. என்னுடைய செல்போன்கூட சீனாவில் தயாரிக்கப்பட்டதுதான்.

உதட்டளவில்

காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்தந்தில் இருந்து மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதத்தில் மோடி பேசி வருகிறார்.

வசதி படைத்தவர்களுக்கு சாதகமாக நடக்கும் மோடி, கடனை தள்ளுபடி செய்கிறார், ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளுடனானஉறவு என்பது பிரதமர் மோடிக்கு உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. 

வில்லன்

பிரதமர் மோடி முதலில் நல்ல காலம் பிறக்கிறது என்று கூறிவிட்டு, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் மூலம் இப்போது வில்லனாக மாறிவிட்டார்.

ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குப் பின், கருப்புபணம் வைத்து இருந்த ஒருவர் கூட சிறையில் அடைக்கப்படவில்லை. 94சதவீத கருப்புபணம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது'' என்று தெரிவித்தார்.

ரூ.20 லட்சம் கடன்

பல்ராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், “ உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இளைஞர்கள் சொந்தமாக நிறுவனம் தொடங்க ரூ.20 லட்சம் கடன் அளிக்கப்படும்.

ஒவ்வொரு நகரத்திலும் அதிக திறன்வாய்ந்த பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்'' என்றார்.