கடந்த ஏபரல் மாதம் நடைபெற்று முடிந்த  மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து வேலூருக்கு நடக்க இருந்த தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. 

இந்த நிலையில் வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று  அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று முதல் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

ரத்து செய்யப்பட்ட தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வரும் தேர்தலிலும் அவர்களே மீண்டும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம்,   வேலூர் மக்கள் “37ஐ 38 ஆக்க நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது ரூ.500 கோடியிலும் நிறைவேற்றப்படலாம், ரூ.2,000 கோடியிலும் நிறைவேற்றப்படலாம். வேலூரின் மக்களவை உறுப்பினர் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும்போது ரூ.3,000 கோடியாகவும் அந்தத் திட்டம் மாற்றப்படலாம். ஆகவே, மத்திய அரசைச் சார்ந்த ஒரு வேட்பாளர் வெற்றிபெறும்போதுதான் வேலூர் தொகுதி வளர்ச்சியடையும். மத்திய, மாநில அரசின் திட்டங்களும் வரும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தியா முழுவதும் வாக்களிக்கும்போது நாம் மட்டும் வாக்களிக்க முடியவில்லை என்பதை வேலூர் தொகுதி மக்கள் அவமானமாகக் கருதினார்கள். திமுக வேட்பாளரால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே திமுகவின் மீதான வேலூர் மக்களின் கோபம் மாறாது என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.,