காவிரி நதிநீர் பிரச்சனையில் மற்ற கட்சிகளுக்கு உள்ள ஆர்வத்தைவிட பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகமாக இருப்பதாக தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகம் வந்த எம்.பி. இல. கணேசன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் மற்ற கட்சிகளுக்கு உள்ள ஆர்வத்தைவிட பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகமாக இருப்பதாக கூறினார். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர் கேள்வி ஒன்று பதிலளித்த இல.கணேசன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவது இல்லை என மத்திய அரசு எப்போதும் சொல்லவில்லை என்று கூறினார்.
அதேபோல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என கர்நாடகாவில் வாதத்தையும் ஏற்கவில்லை என்றார். காவிரி மேலாண்மை வார்யத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்து அமைக்கப்பட்டால்தான் அந்த வாரியங்கள் அதிகாரப்பூர்வமாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குறித்து கேள்வி ஒன்று எழுப்பினார். அதற்கு பதிலளித்த இல.கணேசன், சுப்பிரமணியசாமி பற்றி எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம். அவரும் பாரதிய ஜனதாவில்தான் இருக்கிறார் என்று எம்.பி. இல. கணேசன் தெரிவித்தார்.
