Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அடிபணிந்தார் மோடி .. பாஜகவை போட்டு பொளந்த சீமான்.

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக வேளாண் பெருங்குடி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டு, அரசின் பலகட்டப் பேச்சுவார்த்தையை சமரசமின்றி எதிர்கொண்டு, பல விவசாயிகள் அப்போராட்டக்களத்திலேயே தங்கள் இன்னுயிரை உயிரிழந்தபோதும் கண்டுகொள்ளாது, 

Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.
Author
Chennai, First Published Nov 19, 2021, 2:28 PM IST

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, கடும் அடக்குமுறையையும், அரச வன்முறையையும்  எதிர்கொண்டு நாட்டின் நலனுக்காகத் தன்னலமின்றி அயராது போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைக் கருதுகிறேன். 700 க்கும் மேலான விவசாயிகளின் உயிரீகத்தாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளினாலும் அளப்பெரும் போராட்டத்தினாலுமே இந்நாட்டின் வேளாண்மையை வணிகமாக்கிடும் இக்கொடும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மையாகும். 

Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மைப்பலத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, நாட்டின் வளங்களைப் பன்னாட்டுப்பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் பல்வேறு திருத்தச்சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதில் உச்சமாக, நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையைச் சீரழித்து, விவசாயிகளைப் பன்னாட்டுக்கூட்டிணைவு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் வலியத் திணிக்கப்பட்டது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதேச்சதிகாரப் போக்குடன் மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து அறவழியில் தொடர்ச்சியாகப் போராடிய வேளாண் பெருங்குடி மக்களின் இடைவிடாத எதிர்ப்புப்போராட்டத்தின் விளைவாகவே தற்போது கொடுங்கோன்மை மோடி அரசு அடிபணிந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக வேளாண் பெருங்குடி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டு, அரசின் பலகட்டப் பேச்சுவார்த்தையை சமரசமின்றி எதிர்கொண்டு, பல விவசாயிகள் அப்போராட்டக்களத்திலேயே தங்கள் இன்னுயிரை உயிரிழந்தபோதும் கண்டுகொள்ளாது, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறமுடியாது என்று இறுமாப்புடன் கடந்துசென்ற ஈவு இரக்கமற்ற மோடி அரசு, தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளதற்கு முக்கியக்காரணம் விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்களேயாகும். உயிர், உடைமை, பொருளாதாரம் என்று பல்வேறு இழப்புகளைச் சந்தித்தபோதும் விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாத மோடி அரசு, தற்போது தங்கள் ஆட்சியதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே வேறு வழியற்ற சூழலில் விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

Modi surrendered to retain power .. Seeman who criticized BJP.

ஆகவே, வெறும் வாய்மொழி அறிவிப்போடு நின்றுவிடாமல் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன். உறுதியான மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச்சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான இவ்விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது வருங்காலத் தலைமுறைகள் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப்பெற்றுள்ள வேளாண் பெருங்குடி மக்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
 

Follow Us:
Download App:
  • android
  • ios